எதிரொலிக்கும் அறைகள்

ஒரு மனிதனின் கருத்துருவாக்கம் அவனுடைய சார்பு நிலையிலிருந்து வருகிறது. சார்பு நிலை அவனுடைய நம்பிக்கைகள், சூழல், கல்வி ஆகியவற்றால் உருவாக்க்கி கட்டமைக்கப்படுகிறது. தொழில்நுட்பம் அன்றாட வாழ்வில் ஊடுருவுவதற்கு முன்பாக ஒரு மனிதனின் சார்பு நிலையானது அவன் சார்ந்த மதம், கல்வி, மண், இனம் ஆகியவற்றைப் பொறுத்து நிலைபெற்றது. அதைத் தொடர்ந்து அது மாற்றமடையும் தருணங்கள் அபூர்வமானதாகவே இருந்தன. அதே நேரம் தொடர்ந்து நூல்களைப் படிக்கும், விவாதிக்கும் ஒருவனின் சிந்தனை உருவாக்கம் தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. ஆனால் அப்படியானவர்கள் சிறிய சதவீதம்தான். அந்த மாற்றம் கூட ஒரு காலத்துக்குப் பிறகு மெல்லக் குறைவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தார்கள். தங்களுடைய நிலைப்பாடு சார்ந்த நூல்களையே தேடிப்படித்து அதையே மேலும் மேலும் கட்டுறுதி செய்கிறார்கள். இது தொடர்பாக மேலை நாடுகளில் பல ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.

உதாரணமாக பருவநிலை மாற்றங்கள் குறித்து உலகெங்கும் நடக்கும் ஆராய்ச்சிகள் பற்றிய சர்ச்சையையே எடுத்துக் கொள்வோம். அமெரிக்க அரசாங்கம் பருவ நிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக நிறைய நிதியை ஒதுக்கிய காலங்களில் அது உண்மை என்று நிரூபித்து அந்த நிதியைப் பெறுவதற்காகவே பல விஞ்ஞானிகள் புள்ளிவிவரங்களைத் திரித்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இது பல நேரங்களில் வேண்டுமென்றே திட்டமிட்டு நடைபெறாது. ஆனாலும் பலரும் நம்பிவிட்ட ஒரு விஷயத்தை நிரூபிக்கும் நோக்கத்துடன் நடக்கும் ஆராய்ச்சிகளில் அதற்கு எதிராக வரும் புள்ளிவிவரங்களை அறிவியலாளர்களின் மனம் ஒதுக்கிவிடுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தொடர்ந்து பருவ நிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து எழுதி வந்த பத்திரிகைகள் அதை எதிர்த்து வரும் ஆராய்ச்சிகளை வெளியிடத் தயங்கின. அது அவர்கள் விரும்பி செய்ததல்ல, தங்கள் நிலைப்பாடையும் சார்பையும் மாற்றும் எந்த வாதத்தையும் ஒப்புக்கொள்ள சம்மந்தப்பட்ட எடிட்டர்கள் தயங்கியதை பின்னாளில் ஒப்புக் கொண்டார்கள். இப்போது பதவி ஏற்றுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆராய்ச்சிகளுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். பருவநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி ஒரு வீண்வேலை என்று அவர் கூறியிருக்கிறார். இனி இந்த ஆராய்ச்சிகளின் திசை எப்படி இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.

பருவ நிலை மாற்றம் என்பது முழுக்கப் பொய் என்று ஒதுக்க முடியாது என்பதற்கு நிறைய தரவுகள் இருக்கின்றன என்றாலும் அது நிகழும் வேகம் குறித்த தரவுகளை இந்த விமர்சகர்கள் கேள்வி கேட்கிறார்கள். புவி வெப்பமடைதலால் க்ரீன்லாந்து பகுதியின் மேல் படர்ந்திருந்த ஐஸ் உருகுவது குறித்து சிபிஎஸ் என்ற அமெரிக்க நிறுவனம் ஒரு செய்தி வெளியிட்டது. அதை எழுதிய வினிதா நாயர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை மாதத்து வெப்ப நிலைக்கும் தற்போதைய ஜூலை வெப்ப நிலைக்கும் இடையே 62 பாரன்ஹீட் உயர்வு இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் நாசா வெளியிட்ட நூறு ஆண்டுகளுக்கான சராசரி வெப்பநிலை குறித்த புள்ளிவிவரங்களில் அதுபோன்ற மாறுபாடு எதுவும் இல்லை என்று இதை மறுக்கிறார் வேறு ஒரு ஆராய்ச்சியாளர். சிபிஎஸ் தனது கட்டுரைக்கு சான்றாக எடுத்துக் கொண்ட வெப்பநிலை அளவீடு ஒரு மலைச் சிகரத்தில் எடுக்கப்பட்டத்தாகவும் மேகத்துக்கு மேலே இருக்கும் சிகரங்களில் சூரியனின் இருப்பைப் பொருத்து பெரியஅளவில் வெப்ப நிலை மாற்றம் இருப்பது இயற்கையே என்கிறார் அவர்.

இதே போல வேறு ஒரு ஆராய்ச்சில் கடல் நீர் மட்டத்தின் உயர்வைக் கணக்கிட எடுக்கப்பட்ட சாட்டிலைட் அளவீடுகளில் 68 இடங்களை விட்டுவிட்டுக் கணக்கிட்டு ஆண்டுக்கு 3.2மிமீ கடல் மட்ட உயர்வு இருப்பதாகக் கூறியதை ஒப்புக் கொண்டார் ஒரு சர்வதேச பருவ நலை மாற்ற ஆராய்ச்சியாளர் ஒருவர். அந்த 68 இடங்களை சேர்த்து கணக்கிட்டால் கடல் மட்டத்தின் உயர்வு 1மிமீ என்ற அளவிலேயே இருந்தது. ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேட்டபோது 1மிமீ என்று ஆராய்ச்சியில் குறிப்பிட்டால் அது புவி வெப்பமடைதல் என்ற கருத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என்றார் அவர். 1930ம் ஆண்டில்தான் வெப்பநிலைகளையும் கடல்மட்டங்களையும் ஆவணப்படுத்தும் வழக்கம் உலகெங்கும் பரவலாக வந்தது. அப்படியிருக்க இப்போது அபாய நிலையாக சுட்டப்படும் புள்ளிவிவரங்களின் இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை சரிபார்க்க வழியில்லை. இது ஏன் மனிதர்கள் அறியாத ஒரு பெரிய பருவசுழற்சியின் காரணமாக இருக்கக்கூடாது என்று கேட்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.

இந்த நேரத்தில் ஒன்றை கவனிக்க வேண்டும். எப்படி பருவநிலை மாற்றத்தை ஆதரிக்கும் அரசுகள், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் தங்களுக்கென்று ஒரு சாய்வை உருவாக்கினார்களோ அதே போல இவை அத்தனையும் ஹம்பக் என்று சொல்பவர்களும் தங்களுக்கென்ற ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டார்கள். அதற்கான தரவுகளைத் தேடிப் பகிர்ந்து கொண்டார்கள். பருவநிலை மாற்றம் தொடர்பான கட்டுரைகளைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கினார்கள். அது உண்மையில்லை என்று தொடர்ந்து எழுதினார்கள். பேசினார்கள். மைக்கேல் க்ரைக்டன் தொடர்ந்து தன்னுடைய நூல்களில் இந்த அறிவியல் ஆராய்ச்சிகளைக் கேள்விக்குள்ளாக்கி வந்தார். இந்த ஆய்வுகளின் முடிவுகளை விஞ்ஞானிகள் மிகைப்படுத்தி மக்களிடையேயும் அரசுகளிடையேயும் பீதியை உருவாக்கி அதன் மூலம் தொடர்ந்து ஆராய்ச்சிகளுக்கு நிதி கிடைக்கும்படி செய்தார்கள் என்று வெளிப்படையாக குற்றம் சாட்டி வந்தார். எனவே நீங்கள் எந்த சார்பு நிலையில் இருக்கிறீர்களோ அதற்கேற்ற தரவுகள் உங்களை வந்தடையும். எதிரணியைக் கேலி செய்யும். உங்களை மகிழ்வூட்டும்.

மீடியா துறையில் இதை எக்கோ சேம்பர் என்று அழைக்கிறார்கள். இந்த எதிரொலிக்கும் அறைகள் நம்முடைய நிலைப்பாடு சார்ந்த செய்திகளையே திரும்பத் திரும்ப நம்மைத் தேடச் சொல்லும். பொய்தான் என்று உள்மனம் சொன்னாலும் தங்கள் கட்சி சார்ந்த தொலைக்காட்சியையும் செய்தித்தாள்களையும் தேடித்தேடிப் படிக்கும் தொண்டர்கள் மனநிலை இப்படியானதுதான். வெறும் அச்சு ஊடகங்கள் இருந்த காலங்களில் இந்த எதிரொலிக்கும் அறைகளை உருவாக்க நீண்ட காலம் பிடிக்கும். இப்போதைய தொழில்நுட்ப உலகில் இது மிகவும் விரைவாகவும் இலகுவாகவும் நடக்கிறது. சமூக வலைதளங்களில் புழங்குபவர்களுக்கு இந்த மனநிலை பழக்கமானதுதான். உருவாக்க ஆகும் காலத்தைப் போலவே கலைக்கும் காலமும் குறுகியதாகவே மாறியிருக்கிறது.

மோடி ஆதரவு, மோடி எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு ஆதரவு, ஜல்லிக்கட்டு எதிர்ப்பு, பண நீக்க ஆதரவு/எதிர்ப்பு என்று எல்லாவற்றிற்கும் இதைப் பொருத்திப் பார்க்க முடியும். யாருமே விதிவிலக்கல்ல. தகவல் உண்மையா என்று சரிபார்ப்பவர்கள் கூட நமக்கு ஆதரவான தரவுகளை மேலோட்டமாகவும் எதிரான தரவுகளை பூதக் கண்ணாடியுடனும் அணுகியிருப்போம். அவ்வளவு நாட்கள் நட்பில் நீடித்திருந்த ஒருவருடன் சண்டையிட்டு விலகியிருப்போம். அதாவது நம்முடைய எக்கோ சேம்பரின் சங்கீதத்தைக் குலைக்கும் குரல்களை ஒரு முறையேனும் ஒடுக்கி அடக்கியிருப்போம். பிறிதொரு காலத்தில் அதை நினைத்து வருந்துவோம். அந்த நேரத்தில் வேறு ஒரு எதிரொலிக்கும் அறைக்குள் நாம் இருப்போம்.

கூகுள், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் இது குறித்து பின்புலத்தில் நிறைய ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன. தொடர்ந்து உங்கள் காலக்கோட்டில் ஒரு குறிப்பிட்ட தொனியிலான செய்திகளை அனுப்புவதன் மூலம் உங்கள் மனநிலையை பாதிக்கச் செய்ய முடியும் என்று கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது சிரியாவில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தையின் படத்தை திரும்பத் திரும்ப அனுப்பி கொண்டாட மனநிலையில் இருந்த ஒரு மனிதரை மெல்ல சோகமாக மாற்ற முடியும். அதுவரை நண்பர்களுடனான செல்பியைப் பகிர்ந்து கொண்டிருந்தவர் தானும் ஒரு சோகமான விஷயத்தைப் பற்றிப் பதிவிடத் தொடங்குவார். ஒரு குறிப்பிட்ட தலைவரைப் பற்றிய எதிர்மறையான செய்திகளைத் தொடர்ந்து அனுப்பி செயற்கையாக ஒரு எக்கோ சேம்பரை உருவாக்க முடியும். அல்லது அவரது அதிருப்தியாளர்களின் இணைய பதிவுகளை அதிகமாகவும் ஆதரவாளர்களின் பதிவுகளை குறைவாகவும் வரும்படி அல்காரிதம்களை மாற்றி அமைக்க முடியும். அது வேறு ஒரு தலைவருக்கோ அல்லது எதிரி நாட்டுக்கோ உதவியாக இருக்க முடியும். இப்போது பணம் கொடுத்தே குறிப்பிட்ட தலைவர்களின் வியாபார நிறுவனங்களின் நடிகர்களின் பக்கங்களை அதிகம் உங்கள் கண்முன் கொண்டு வர முடியும். மோடி, ஸ்டாலின் போன்றவர்களின் ஆன்லைன் பிரச்சாரங்களில் சிறியதாக ஸ்பான்சர்டு என்று இருப்பதை கவனித்திருப்பீர்கள். உங்கள், மொழி, வயது, விருப்பங்கள் சார்ந்து யாருக்குத் தேவையோ அவர்கள் கண்முன் மட்டும் இது வந்து நிற்கும்.

சாதாரண ஊடகங்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. அங்கே செய்திகளை நாம் தேடிச் செல்கிறோம். இங்கே செய்திகள் நம்மைத் தேடி வருகின்றன. அதுவும் நமக்கு அறிமுகமானவர்களிடமிருந்து. வரும் செய்திகளை அதிகமாக நம்புவதென்பது ஒரு மனோதத்துவம். நம்முடைய நட்பு வட்டத்தில் நமக்கு ஒத்த கருத்துடையவர்களாகப் பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதியும் இங்கே இருக்கிறது. இதில் நான் உட்பட யாரும் விதிவிலக்கல்ல. ஒவ்வொருவரும் அவரவருக்கான எதிரொலிக்கும் அறைகளை உருவாக்கிக் கொள்கிறோம். நாம் எதிர்பார்க்கும் ஓசைகளை ஒரு இசை போல அவை திரும்பத் திரும்ப ஏற்படுத்துகின்றன. நமது நம்பிக்கைகளை அவை தொடர்ந்து உறுதிப்படுத்துகின்றன. கூட்டத்தை விட்டு விலகி இல்லை என்ற ஆறுதல் நமக்குத் தொடர்ந்து தேவையாக இருக்கிறது.

அப்படியானால் எல்லா நேரங்களிலும் தவறான திசையில் நாம் செல்கிறோமென்று பொருள் கொள்ள வேண்டியதில்லை. இதுவரை மட்டுமல்ல இனி வரும் காலங்களிலும் இது போன்ற எதிரொலிக்கும் அறைகளில் சிக்குவதும் மீள்வதும் ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து நடக்கும். அந்த அறை நண்பர்கள் கூட்டமாகவோ, ஒரு சாதி சார்ந்த அமைப்பாகவோ, ஒரு வாட்ஸ் ஆப் குழுவாகவோ, ஃபேஸ்புக் நண்பர்களாகவோ இருக்கலாம். அல்லது நாம் சார்ந்த கட்சியின் தொலைக்காட்சியாக இருக்கலாம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எக்கோ சேம்பர்களுக்குள்தான் நாம் வாழப் போகிறோம். ஆனால் எக்கோ சேம்பர்களின் இருப்பை உணர்வது நமது கருத்தாக்கத்தை நம்மால் இயன்ற அளவு தூய்மையாக வைத்துக் கொள்ள நாம் எடுக்கும் முதல் படியாக இருக்கும்.

மாரத்தான் வாழ்க்கை

எனது விப்ரோ 21 கிமீ மாரத்தான் போட்டி உள்ளம்தான் உடல் என்பது மீண்டும் உறுதியான தருணம். ஐந்து கிலோ மீட்டர்களைத் தாண்டி தொடர்ந்து ஓடுவதற்கு கடந்த ஆண்டில் உடல்ரீதியான ஒரு தடை இருந்தது. காலில் ஏற்பட்ட காயமும் பயிற்சியில் ஏற்பட்ட இடைவெளியும் அதற்குக் காரணம்.  டிசம்பர் அரை இரும்பு மனிதன் போட்டியில் பாதியிலேயே விலகியது, மூன்று நாட்கள் முன்பு ஓடியபோது ஐந்து கிலோ மீட்டருக்குப் பிறகு உடல் ஒத்துழைக்கவில்லை. இவற்றோடு சைனஸ், வீசிங் தொல்லை ஆகியவை என்னை மனதளவில் தளர வைத்திருந்தன. ஆனால் அரை மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வது என்பதில் தெளிவாக இருந்தேன்.

புத்தகக் கண்காட்சிக்கு சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி, தாமதமாகவே வீடு வந்தேன். இடுப்பில் கட்டும் பை, காலில் போட பேண்டேஜ், வாசலின், சிறிய பாட்டிலில் தண்ணீர் என்று எடுத்தாகிவிட்டது. 5 மணிக்கு மாரத்தான். காலை 4 மணிக்கு டாக்சி சொல்லியாகிவிட்டது. 330 மணிக்கு அலாரம் வைத்தாகிவிட்டது. எல்லாம் தயார் என்ற மன நிலையில் படுத்தேன். அங்கே விதி வீரப்பா மாதிரி சிரித்துக் கொண்டிருந்தது எனக்குத் தெரியவில்லை.

கிணற்றுக்குள் யாரோ போனைப் போட்டு விட்டார்கள். அது வேறு அடிக்கிறது. எப்படி எடுப்பது என்ற குழப்பத்துடன் விழித்தால் அடிப்பது எனது போன்தான். எழுந்து எடுத்தால் ‘சார் நான் ஓலா டிரைவர் பேசறேன். கீழேதான் நிற்கிறேன்’ என்று ஒரு குரல். இவர் எதற்கு இங்கே வந்து நிற்கிறார் என்று யோசிக்க கஜினி சூர்யா மாதிரி ஒவ்வொன்றாக நினைவுக்கு வருகிறது. அடித்துப் பிடித்து எழுந்து உடை மாற்றி, தொடை, அக்குள் எல்லாம் வாசலின் பூசி (நீண்ட தூர ஓட்டங்களில் இது முக்கியம்) சாப்பிட ஏதாவது இருக்கிறதா என்றால் எதுவும் இல்லை. ஒரு குத்து முந்திரி, பாதாம் திராட்சையை கையில் அள்ளிக் கொண்டு லூனா செருப்பை அணிந்தும் அணியாமல் ஓடி காரில் ஏறி கிளம்பினால் மணி 4:20. நல்ல வேளையாக போட்டி நடக்கும் இடம் வீட்டுக்கு அருகில்தான்.

அங்கே போவதற்குள் கையில் இருந்தவற்றை சாப்பிட்டு கொஞ்சம் தண்ணீர் குடித்தாகிவிட்டது. முந்தைய நாள் மதியம் ஆந்திரா மெஸ் ஃபுல் மீல்ஸ் ஒரு கட்டு கட்டி இருந்தேன். இரவில் மிதமான உணவுதான் உண்ணவேண்டும். டாக்சியை போட்டி நடக்கும் இடத்துக்கு 1 கிமீ முன்பாகவே டேக் டைவர்சன் என்று துரத்தி விட்டார்கள். இறங்கி நடக்க ஆரம்பிக்கும்போது 4:40. முழு மாரத்தான் போட்டி தொடங்கி இருந்தது. நான் தொடக்க இடத்தை அடையும்போது நடையின்  மூலமாகவே வார்ம் அப் ஆகி இருந்தேன். அவசரமாக காலுக்கு எனது பிசியோ சொன்னபடி பாதுகாப்பு பேண்டேஜ் போட்டு முதல் முறையாக என்னுடைய லூனா செருப்பில் ஒரு மாரத்தான் ஓட தயாரானேன். லூனா செருப்பு வெற்றுக்காலில் ஓடுவதற்கு இணையான அனுபவம் தரும். காலுக்கு ஒரு பாதுகாப்பும் கிடைக்கும். ஆனால் பழக வேண்டும். காலம் பிடிக்கும். அது வேறு தனி பயம்.

நான் தொடக்கப்புள்ளியை அடையவும் மாரத்தான் தொடங்கவும் சரியாக இருந்தது. எனக்கென்னவோ அப்போதைய மனநிலையில் 3 மணி நேரத்தில் முடித்தாலே அது சாதனை என்று தோன்றியது. என்னுடைய பெஸ்ட் 2:33 (முதல் அரை மாரத்தான்). 2015ல். அதன் பிறகு எல்லாமே 2:45, 3:00 என்ற நேரத்தில்தான். ஆரம்பிக்கும்போது ராம் கணேஷ் என்ற நண்பன் 2:30 பஸ்ஸில் இணையுங்கள் என்றான். அந்த திசைக்கே ஒரு கும்பிடு போட்டு எந்த இலக்கும் இல்லாமல் ஓடப் போகிறேன் என்றேன். அதுவும் நல்லதுதான் என்றான். மெல்ல எனது வழக்கமான வேகத்தில் ஓட்டம் ஆரம்பம்.

மாரத்தான் ஓடும்போது இதயத் துடிப்பு, சுவாசம் ஆகியவற்றை கவனிக்க வேண்டும். இவை நமது வழக்கமான அளவை விட சிறிது அதிகமாக இருக்கலாம். ஆனால் எக்குத் தப்பாக எகிறும் போது நீங்கள் அதிக தூரம் ஓட முடியாது. அது நடந்தால் வேகத்தைக் குறைத்து மீண்டும் இதயத் துடிப்பை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். முதல் மூன்று கிலோ மீட்டர்கள் எப்போதும் அதிகம் மூச்சிரைக்கும், சில தசைகள் வலிக்கும். பிறகு ஒரு சமன்பாடு கிடைக்கும். ஐந்த் கிலோமீட்டர்கள் வரை ஓடுவது. அதன் பிறகு நடப்பது என்ற முடிவில் இருந்தேன். ஐந்தாவது கிலோ மீட்டருக்குப் பிறகு ஒவ்வொரு கிலோ மீட்டராக ஓடத் தொடங்கினேன். ஆறு, ஏழு, எட்டு என்று கூடியது. ஓடும்போது ஒவ்வொரு கிலோ மீட்டரிலும் முதல் 150 மீட்டர்கள் சற்று வேகத்தைக் குறைத்து ஓடி ஆசுவாசம் செய்து கொண்டேன். அது உதவியது. பத்து கிலோ மீட்டரை ஒரு ஆண்டில் முதல் முறையாக தொடர்ந்து ஓடிக் கடந்த போது மனதில் ஒரு நம்பிக்கை பரவியது (8.4கிமீ/மணி). ஆனால் அப்போதும் ஒவ்வொரு கிலோமீட்டர் மட்டுமே இலக்கு. 3மணி நேரம் தான் இறுதி இலக்கு. அதனால் மனதில் பரபரப்பு இல்லை.

முதல் 5 கிலோமீட்டரிலேயே கடலை பர்பி, வாழைப்பழம் போன்றவற்றை உண்டு கொண்டேன். இவை சக்தியாக மாற குறைந்தது 1 மணி நேரம் தேவை. மற்றபடி உங்கள் உடலில் பல மணி நேரங்களுக்கு முன் உண்ட உணவுதான் ஓட்டத்தில் உதவும். எனவே பக்கி போல் இவற்றை விழுங்குவதால் பெரிய பலனில்லை. முதலிலேயே எலக்ட்ரால் போன்றவை தேவையில்லை. இரண்டாவது பாதியில் எடுத்தால் போதும். பெரிய மாரத்தான் போட்டிகளில் முதல் இரண்டு உதவி நிலையங்களில் கூட்டம் அம்மும். கையில் ஒரு கால் லிட்டர் பாட்டிலில் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். இவற்றைத் தாண்டி ஓடிவிடுவது நிறைய நேரத்தை மிச்சப்படுத்தும். நிறைய வேர்வை வெளியேறும்போது எலுமிச்சையை உப்பில் தோய்த்து சாப்பிடவேண்டும்.

வேகமாக ஓடும் பல நண்பர்கள் என்னை எதிரில் பார்த்து சென்றார்கள். என்னுடைய வேகத்திலிருந்து நான் மாறவில்லை. அது வரை நடக்கவே இல்லை என்பதால் 2:45 என்பது சுலபமான இலக்காக மாறி இருந்தது. சீரான வேகத்தில் இருந்து மாறவில்லை. 12கிமீ தொலைவில் யு டர்ன். அப்போது இனி கடைசி வரை கால்கள் நிற்காது என்ற நம்பிக்கை முழுதாக வந்து விட்டிருந்தது. 16 கிலோ மீட்டர் வரை இன்னும் சிறிது வேகம் கூட்டுவது என்று முடிவு செய்தேன் (9கிமீ/மணி). ஆனால் இதயத்துடிப்பு நம் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதை மறக்கவில்லை.

இரண்டு மணி நேரத்தில் 17கிமீ தொலைவைக் கடந்துவிட்டேன். பிறகு அடுத்த 2 கிலோமீட்டர்கள் சற்று வேகம் குறைத்து ஓடினேன் (8.6கிமீ/மணி). இதயத்துடிப்பை மீண்டும் சமன் செய்ய. அப்போது மீண்டும் ராம் கணேஷைப் பார்த்தேன். 2:30 பஸ் இங்கேதான் போகிறது சீக்கிரம் போங்க என்றான். தூரத்தில் பலூன் தெரிந்தது. (பஸ் என்பது வாகனம் அல்ல. ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய உதவும் குழு. அதில் ஒரு பேசர் இருப்பார். அவர் அனுபவம் மிக்க ஓட்டக்காரர். சில நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருப்பார்கள். உங்கள் இலக்கை அடைய அவர்களுடன் ஒட்டிக் கொண்டு தொடர்ந்து ஓடினால் போதும் இது போல் ஒவ்வொரு நேர இலக்குக்கும் ஒரு பஸ் ஓடும்). அதன் பிறகு அவர்களைப் பிடிப்பது மட்டுமே இலக்காக  ஓடத்தொடங்கினேன். ஓட்டத்தின் கடைசி கிலோமீட்டருக்கு முன்பாக அடையாறு மலர் மருத்துவமனை பாலம் வரும். பாலத்தில் ஓடும்போது உங்கள் ஓட்டத்தில் ஒரு அடிக்கும் அடுத்த அடிக்கும் உள்ள தொலைவைக் குறைத்து ஓடுவது பலன் தரும். பிறகு இறக்கத்தில் ஓடும்போது இலகுவாக இருந்தாலும் வேகத்தைக் கூட்டாமல் ஓடுவது கால்களுக்கு நல்லது. இதனால் பாலத்தில் ஏறும்போது இதயத்துடிப்பு எகிறினாலும் இறக்கத்தில் மீண்டும் கட்டுக்குள் வரும். பாலத்திலேயே 2:30 பஸ்சுக்கு விடை கொடுத்தாகிவிட்டது.

facebook_1483926889559

பாலம் இறங்கியபின் கடைசி ஒரு கிலோமீட்டர் ஓட சக்தி மிச்சம் இருந்தது பெரிய மகிழ்ச்சி. அங்கிருந்து மேள தாளங்களுடன் வெறியேற்றுவார்கள். ஆனாலும் உணர்ச்சிவசப்பட்டு உசைன் போல்ட் ஆகி ஓடினால் அடுத்த 200 மீட்டரில் க்ளீன் போல்டு ஆகிவிடுவோம். இருபது கிலோமீட்டர் ஓடிவிட்டாலும் ஒரு கிலோமீட்டர் என்பது குறைந்த தூரமில்லை என்பது மனதில் இருக்க வேண்டும். அதே நேரம் மெதுவாக வேகத்தைக் கூட்டுவது தவறில்லை. எனது வேகத்தை அப்போதைய உடலின் சக்திக்கு ஏற்ப கூட்டினேன். கடைசி 500 மீட்டர்களுக்குப் பிறகு இதயத் துடிப்பு பற்றியெல்லாம் கவலை இல்லை. இனி உறுதியாக முடிக்க வேண்டும் (10.5கிமீ/மணி). ஒரு வழியாக முடிவுக் கோட்டைப் பார்த்தபோது அப்படி ஒரு நிறைவு. ஓட்டத்தை முடித்தபோது (02:25:36) அது என்னுடைய சிறந்த அரை மாரத்தான் ஓட்டம் என்பதை உணர்ந்தேன். இந்த ஆண்டின் முதல் நிறைவான தருணம் அது.

photo-from-shan-2

மாரத்தான் என்பதை வெறும் ஓட்டம் அல்லது உடற்பயிற்சி என்று எண்ண வேண்டாம். அது ஒரு வாழ்க்கைப் பாடம். பொறுமை, திட்டமிடல், பயிற்சி மற்றும் சரியான செயல்படுத்தல் என்று பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்து நம்மைப் பண்படுத்தும். நம்மால் முடியாது என்று ஒரு காலத்தில் நினைத்திருந்த விஷயங்களை முடிக்க வைக்கும். அதை அப்படியே வாழ்க்கைக்கு இழுத்துப் பாருங்கள். ஒவ்வொரு ஓட்டமுமே நமக்கு ஏதோ சொல்லித் தந்துகொண்டே இருப்பதை உணர முடியும். எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டால் வாழ்க்கை மிக அழகான தருணங்களைத் தந்துகொண்டே இருக்கும் என்பதுதான் இந்த ஓட்டத்தில் நான் புதிதாகக் கற்ற பாடம்.

இது என்னுடைய ஓட்டம். என்னுடைய பாடம். என்னுடைய அனுபவம் மட்டுமே. உங்கள் ஓட்டம் வேறு. உங்கள் போட்டி வேறு. ஒவ்வொருவர் ஓட்டமும் தனித்துவமானது. உங்கள் பாடத்தை நீங்கள்தான் எடுத்துக் கொள்வீர்கள். என்னுடைய பாடம் அதற்கு ஒரு பாலமாக இருந்தால் மகிழ்ச்சிதான்.

photo-from-shan

லூனா: என்னுடைய லூனா செருப்பு கடைசிவரை அருமையாக ஒத்துழைத்தது. காலில் சிறு கொப்புளங்கள் இருந்தன. முதல் முறை இது சகஜம் என்றும் நாளடைவில் சரியாகும் என்றும் அறிந்துகொண்டேன். என்னுடைய ஆச்சரியமான டைமிங்கை லூனா செருப்புக்கும் சமர்ப்பிக்கிறேன். ஷூ அணிந்தால்தான் சிறப்பாக ஓட முடியும் என்பது வெறும் விளம்பர உத்தி.

நன்றி: வைப்ரண்ட் வேளச்சேரி நண்பர்கள், உள்ளத்தனைய உடல் நண்பர்கள், முக்கியமாக தங்களுக்கான என் நேரத்தைப் பகிர்ந்த என் மனைவியும் மகள்களும்.

உயிர்த்தெழும் நாடகங்கள்

தொழில்நுட்பம் என்றாலே முன்னோக்கிய நகர்தலுடன் தொடர்புடைய ஒரு சொல்லாகத் தோன்றுகிறது. அதில் உண்மை இல்லாமல் இல்லை. இதுவரை நாம் கற்றறிந்த, பின்பற்றிய வழிமுறைகளை தொழில்நுட்பங்கள் கேள்விக்குள்ளாக்குகின்றன. மாற்றுகின்றன. பல நேரங்களில் அழித்தும் விடுகின்றன. தொழிற்சாலைகள், கருவிகள் தாண்டி கலை வடிவங்களிலும் தொழில்நுட்ப மாறுதல் தன்னுடைய விளைவுகளை நிகழ்த்திக் கொண்டே வந்திருக்கிறது. புகைப்படம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்படும் வரை தத்ரூபமாக இயற்கைக் காட்சிகள் வரைபவர்களும் மகாராஜாவை உட்காரவைத்துப் படம் வரைபவர்களும் பெரிய ஓவியர்களாகக் கொண்டாடப்பட்டார்கள். புகைப்படங்களின் வரவு ஓவியர்கள் காட்சியைத் தாண்டிய கருத்துருவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கின. இந்த மாற்றமே நவீன ஓவியங்களின் பிறப்புக்கு வழிவகுத்தன. ஆனால் தொழில் நுட்ப வளர்ச்சி என்பது எப்போதுமே முன்னோக்கிய திசையில்தான் இருக்க வேண்டும் என்று கருத வேண்டியதில்லை. எதிரான திசையிலும் தொழில்நுட்பத்தை வேலை செய்ய வைக்க முடியும்.

உதாரணமாக மொபைல்களின் வருகையை எடுத்துக் கொள்வோம். அழிந்து விட்டதென்று அனைவரும் நினைத்த பொழுதுபோக்கு வடிவம் ஒன்றை அந்தப் பரவல் உயிர்ப்பித்தது. டிவிக்களின், டேப் ரெக்கார்டர்களின் வருகையால் பயனழிந்து போயிருந்த ரேடியோதான் அது. நமக்குத் தேவையான பாடல்களை உடனே கேட்டுப் பெறலாம், நம் குரலை நாமே கேட்கலாம் என்ற புதிய அனுபவம் ரேடியோவை மீண்டும் உயிர்ப்பித்தது. இதே போல முன்னேறிய தொழில்நுட்பத்தின் மூலம் முக்கியத்துவம் இழந்த கலை வடிவங்களை மீட்டெடுக்கும் முயற்சிகள் மேலை நாடுகளில் நடந்து வருகின்றன. முக்கியமாக நாடகங்களும் அருங்காட்சியகங்களும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் நாடகங்கள் இருந்ததாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஐந்தாம் நூற்றாண்டு வரை சமஸ்கிருத நாடகங்கள் இந்தியாவில் பெரும் வளர்ச்சி பெற்ற கலை வடிவமாக இருந்திருக்கின்றன. அதன் பிறகு நாடக இலக்கியம் மெல்ல அழிந்து பரதம், கதை சொல்லுதல், இசை வடிவங்கள் என்று தனித்தனியான கலைகளாக உருவெடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேற்கத்தியர்களின் வருகைதான் நவீன நாடகம் என்ற வடிவத்தை மீண்டும் உயிர்ப்பித்தது. அதன் பிறகு சுதந்திரப் போராட்டம், கம்யூனிசம் என்று நாடகக்கலையின் மூலம் பிரச்சாரங்கள் நடந்தன. நாடகங்களின் தாக்கம் தமிழக அரசியல் வரலாற்றில் இன்றும் எதிரொலிக்கிறது. ஆனால் சினிமா, தொலைக்காட்சி போன்ற கண்டுபிடிப்புகளின் வருகை நாடகங்களை மேடையிலிருந்து நகர்த்திக் கொண்டு போயின. திறமையான நாடக நடிகர்கள், இசைக் கலைஞர்கள் நாடகத்தை விட்டு சினிமாவில் இறங்கினார்கள். இன்று இந்தியாவில் நாடகக் கலை குறிப்பிட்ட ஆர்வம் மிக்க குழுவினர் மட்டுமே பார்த்து ஆராதிக்கும் கலை வடிவமாக சுருங்கிவிட்டது. பெருநகரங்கள் தவிர வேறேங்கும் நாடகங்கள் நடப்பதே இல்லை.

மேலை நாடுகளில் நாடகக்கலை அவ்வளவு நலிவடையவில்லை என்றாலும் தங்களது படைப்பு சில நூறு கோடிகள் செலவில் உருவாகும் பிரமாண்ட திரைப்படங்களைத் தாண்டி கேண்டி கிரஷ், எக்ஸ் பாக்ஸ் போன்ற அதி நவீன பொழுது போக்குகளைத் தாண்டி மக்களை அரங்குகளுக்கு இழுக்க வேண்டியிருப்பதை அவர்கள் உணர்கிறார்கள். எனவே நாடகங்களில் நவீன தொழில் நுட்பத்தைப் புகுத்துவதன் மூலம் திரைப்படங்களைத் தாண்டிய அனுபவங்களைத் தர முடியுமா என்று தொடர்ந்து சோதித்து வருகிறார்கள்.
இது ஒன்றும் புதிய முயற்சி அல்ல. ரோமானியர்கள் காலத்தில் வெள்ளம் வருவது போன்ற காட்சிகளில் ஒரு பெரிய தொட்டியில் இருந்து தண்ணீரைத் திறந்து விட்டு பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துவார்களாம். கிரேக்கர்கள் பறந்து வரும் கடவுள் பாத்திரங்களை மேலிருந்து கயிற்றில் கட்டி இழுப்பார்களாம். இவையெல்லாம் அப்போது இருந்த தொழில்நுட்பங்கள்.

இப்போது இருக்கும் தொழில் நுட்பம் மூலம் மிகச்சுலபமாக பின்னணிக் காட்சிகளை தத்ரூபமாக கணினியில் உருவாக்க முடியும். நீங்கள் திருமலை நாயக்கர் மகாலில் இருப்பது போன்ற காட்சியை நாடகத்தில் வைத்தால் அதை தத்ரூபமாக வரையும் ஓவியரைக் கண்டுபிடிப்பது கடினம். ஆனால் ப்ரொஜெக்‌ஷன் மூலமாகவோ ஒரு ராட்சத எல்இடி திரையிலோ சுலபமாக கொண்டு வந்து விடலாம். இது பேக் ப்ரொஜெக்‌ஷன் என்ற முறையில் கறுப்பு வெள்ளை திரைப்படக் காலங்களிலேயே வந்து விட்டது. பின்னணிக் காட்சிகள் திரையில் ஓடும் போது குதிரை வண்டி போன்ற பெட்டியில் நடிகர்கள் குலுங்கிக் குலுங்கி நடிப்பார்கள். ஆனால் இந்த முறையில் ஒரு குறை இருக்கிறது. தட்டையான ஒரு திரையின் முன்பாக நின்று நடிப்பது. திரைப்படங்களில் இதை மறைத்துவிட முடியும். நாடகங்களில் இது அப்பட்டமாவே தெரியும். ஆனால் இப்போதுள்ள தொழில் நுட்பம் மூலம் ஒரு நாடகத்தின் காட்சிக்குத் தேவையான இடத்தை முப்பரிமாணத்தில் மேடையில் உருவாக்கிவிட முடியும்.

நாடகத்தின் ஸ்கிரிப்ட் படி காட்சிக்குத் தேவையான சுவர்களையும் சிறு மேடைகளையும் மாடிப் படிகளையும் எந்த விதமான பெயிண்ட் அல்லது வேலைப்பாடுகள் இல்லாமல் பெட்டி பெட்டியாக உருவாக்கி வைத்து விடுகிறார்கள். இதே போன்ற அளவில் மேடை அமைப்பு மாயா போன்ற முப்பரிமாண மென்பொருட்கள் உதவியுடன் கணினியில் உருவாக்கப்பட்டு பொறுமையாக அவற்றின் மேற்பரப்புகள் மரம், கண்ணாடி, துணி போன்ற தன்மையுடன் உருவாக்கம் செய்யப்படும். இதை டெக்சர் மேப்பிங் என்று சொல்லுவார்கள். பிறகு மேடையில் இருக்கும் ப்ரொஜெக்‌ஷன் கருவிக்கு இந்த மேப்பிங் உள்ளிடப்படுகிறது. இப்போது உங்களுக்குத் தேவையான செட் முப்பரிமாணத்தில் உயிருக்கு வரும். நேரில் பார்ப்பதற்கு மொட்டையாக ஒரே வண்ணத்தில் தெரியும் மேடை இந்த முப்பரிமாண ப்ரொஜெக்‌ஷன் மூலம் தேவையான நிறங்களையும் மேற்பரப்பையும் பெறும். இதன் மூலம் நாடக செட்களை ஒரு கிடங்கில் சேமித்து வைக்க வேண்டிய தேவை இல்லை. மீண்டும் உருவாக்குவதற்கு அதிக செலவும் பிடிக்காது. அது மட்டுமல்ல பின்னணியில் இருக்கும் பொருட்களை அசைய வைக்க முடியும். திரைச்சீலை ஆடிக் கொண்டிருக்கும். நீரூற்று இயங்கிக் கொண்டிருக்கும். சன்னலுக்கு வெளியே மழை பெய்து கொண்டிருக்கும்.

tumblr_inline_o6y0yepsgt1rr01n8_1280

பின்னணி அமைப்புகளைத் தாண்டி வேறு பல முயற்சிகளும் எடுக்கிறார்கள். ஹோலோகிராம் மூலம் முப்பரிமாண கற்பனை பாத்திரங்களை நிஜ நடிகர்களுடன் சேர்ந்து உலவ விடலாம். கொஞ்சம் புகை மாதிரி தெரிந்தாலும் பேய் நாடகங்களுக்கு வசதியாக இருக்கும். ஒரு பிரபலமான திரை நடிகரை ஹோலோகிராம் செய்து நிஜ நடிகர்களுடன் இணைத்து மேடையேற்றலாம். மோஷன் கேப்சர் மூலம் ஒரு கணிணியில் வடிவமைத்த பாத்திரம் நிஜ மனிதர்களுடன் நடிக்க முடியும். இப்போதுள்ள தொழில் நுட்பம் மூலம் உங்களது கை கால் அசைவுகள் மூலம் கணிணிக்குக் கட்டளைகள் இட முடியும். கணிணி பாத்திரங்கள் உங்கள் அசைவுக்கு ஏற்ப தங்கள் அசைவை மாற்றிக் கொள்ளும். நீங்கள் நடந்தால் உங்களை இரண்டடி விட்டுத் தொடரும். இவை அனைத்தையும் சோதனை முறையில் செய்தும் பார்த்திருக்கிறார்கள். 3டி கண்ணாடி போட்டுக் கொண்டு தலை வலிக்க வலிக்கப் பார்க்கும் திரைப்படங்கள் போல் இல்லாமல் இவை நிஜமான முப்பரிமாண அனுபவத்தை பார்வையாளர்களுக்கு அளிக்கின்றன. இவற்றை மிக்ஸ்டு ரியாலிட்டி என்று அழைக்கிறார்கள்.

வழக்கம் போல இந்த முயற்சிகளுக்கும் எதிர்ப்புகள் இல்லாமல் இல்லை. தூய்மையான நாடகக் கலையை இது போன்ற செப்படி வித்தைகள் மூலம் மாசுபடுத்துவதாகக் கூறுகிறார்கள் சில முன்னணி நாடகப் படைப்பாளர்கள். அதே நேரத்தில் காலத்திற்கேற்ப மாற்றங்களை செய்துகொண்டே வருவதில் தவறில்லை என்றும் கதைக்குத் தேவையான அளவு தொழில்நுட்பத்தைப் புகுத்துவதால் தவறில்லை என்றும் சில ஜாம்பவான்கள் கூறியிருக்கிறார்கள். இவர்கள் இப்படி அடித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த வேலைகளை செய்வதற்கு இப்போது ஒரு தனித் துறையே உருவாகி விட்டது. கல்லூரிகள் இளங்கலை முதுகலை படிப்புகளைத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு வீடியோ டிசைனர்கள் என்று பெயர். நாடகங்கள் மட்டுமல்லாமல் இசை நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் சமீப காலங்களாக அரசியல் மேடைகள் என்று இவர்கள் திறமை தேவைப்படும் இடங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. மோடியின் ஹோலோகிராம் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

நாடகங்கள் இப்படி ஒருபுறம் உயிர்த்தெழ முயன்று கொண்டிருக்க இன்னொரு புறத்தில் அருங்காட்சியகங்கள் தங்கள் வெறுமையாகிக் கொண்டிருக்கும் கல்லாக்களை நிரப்பப் போராடிக் கொண்டிருக்கின்றன. கூகுள் தனது ஆர்ட் என்ற ப்ராஜெக்ட் மூலம் உலகெங்கிலும் உள்ள பதினேழு காட்சியகங்களின் ஒவியங்களை மின்மயமாக்கி இணையத்தில் வைத்து விட்டது. தினமும் ஒரு அரிய ஓவியம் என்று உங்கள் உலாவியில் அதுவே காட்டுகிறது. அப்படியானால் ஒருவர் எதற்காக இந்த இடங்களுக்குப் பணம் செலவு செய்து வரவேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

ar-150718974-jpgupdated201507181451maxw800maxh800noborder

வருடந்தோறும் சுமார் ஒரு கோடி பார்வையாளர்கள் லூவர் மியூசியத்துக்கு வருகிறார்கள். ஆம் புகழ் பெற்ற மோனலிசா ஓவியம் இருக்கும் அதே இடம்தான். ஆனால் அந்தக் கூட்டத்தின் சராசரி வயதை ஆராய்த்து பார்த்தபோது இது எதிர்காலத்திலும் தொடருமா என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக மில்லெனியல்ஸ் என்று அழைக்கப்படும் பதின்வயதினரை எப்படி இது போன்ற செத்த மியூசியங்களுக்குள் வரவழைப்பது என்பது நெட்பிளிக்ஸ் காலத்தில் ஒரு பெரிய சவால். எனவே லூவர் மியூசியம் தன்னைத் தொடர்ந்து நவீனப்படுத்திக் கொள்வதில் பெரும் செலவு செய்கிறது. அங்கே வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு நின்டென்டோ 3DSXL என்ற கையடக்க கருவியைத் தருகிறது. கணிணி விளையாட்டுகள் விளையாடும் கருவி அது. அதற்குள் முன்பே ஏற்றப்பட்ட செயலியில் 35 மணி நேர அளவுக்கு அவர்கள் காட்சிக்கு வைத்துள்ள படைப்புகள் குறித்த ஒலிப்பதிவு இருக்கிறது. நீங்கள் எந்தப் படைப்புக்கு அருகில் இருக்கிறீர்களோ அது குறித்த வரலாறு, அதன் தனிச்சிறப்பு ஆகியவற்றை நீங்கள் விரும்பும் உலகின் முக்கிய மொழி உடனே கேட்க முடியும். நீங்கள் பார்க்க விரும்பும் படைப்பு எங்கே இருக்கிறது என்று அதில் தேடினால் அந்த இடத்தைக் காட்டுகிறது. உங்களை வழி நடத்திப் போகிறது. அசைவற்ற விளக்கப்படங்களை நீக்கி பெரிய தொடுதிரைகள் அந்த இடத்தை ஆக்கிரமிக்கின்றன.

சில அருங்காட்சியகங்கள் தங்கள் தனிப்பட்ட மொபைல் செயலிகளின் மூலம் நீங்கள் உள்ளே நுழைந்ததில் இருந்து வெளியே செல்லும் வரை தேவையான விவரங்களை அளித்தபடியே இருக்கின்றன. இதற்கு பீக்கன் என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் இருக்கும் இடத்தை இந்த பீக்கன்கள் உணர்ந்து நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அந்த இடத்திற்குத் தகுந்த விவரங்களை மட்டும் அளிக்கும். அதாவது நீங்கள் வரவேற்பு மேசையருகே இருக்கிறீர்கள் என்றால் முதலில் டிக்கெட் வாங்கச் சொல்லி செய்தியனுப்பும். உங்கள் மொபைல் பணப்பை மூலம் ஒரே தட்டலில் வாங்கிக் கொள்ள முடியும். அருங்காட்சியகத்தின் உள்ளே இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு வெகு அருகே உள்ள படைப்பு குறித்து விளக்கங்கள் அளிக்கும். உணவகம் அருகில் இருக்கிறீர்கள் என்றால் மைக்கேல் ஆஞ்சலோவுக்குப் பிடித்த இடியாப்பம் இங்கே கிடைக்கும் என்று கண்ணடிக்கும். இந்தத் தொழில்நுட்பம் லோக்கல் ஜிபிஎஸ் என்று அழைக்கப்படுகிறது. உங்கள் மொபைல் மூலம் ஒரு ஓவியத்தைப் படம் பிடித்தால் அந்த ஓவியம் எதுவென்று அந்தச் செயலி உணர்ந்து அதன் விவரங்களை சொல்கிறது.

ஆனால் இவை அனைத்தும் இந்தியாவுக்கு வருமா என்ற கேள்வி முக்கியமானது. நாடகத்துறையைப் பொறுத்தவரை அதன் சந்தை இந்தியாவில் சோதனைகளை அனுமதிக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இது ஒரு கோழி – முட்டை கதைதான். இதற்கான கருவிகள், மென்பொருட்களின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆர்வம் இருப்பவர்கள் முன்னெடுத்தால் நாடகங்களோடு தெருக்கூத்து போன்ற கலைகளையும் தொழில் நுட்பம் மூலம் மீட்டெடுக்க இந்தியாவில் சோதனை முயற்சிகள் நடத்தலாம். அவை ஒரு பரபரப்பையாவது உருவாக்கி மக்கள் கவனத்தைத் திருப்பும். இந்திய அருங்காட்சியகங்கள் குறித்துப் பேசவே தேவையில்லை. நம்முடைய மத்திய மாநில அரசுகளின் அற்புதமான பராமரிப்பால் இன்னும் கொஞ்ச காலத்தில் அங்கே வைத்திருப்பவை தானாகவே மக்கி மண்ணாகிவிடும். கங்கையில் கரைத்துவிட்டு ஆக வேண்டிய வேலையைப் பார்க்கலாம். ஆர்வலர்கள் விரும்பினால் அவசரமாக அவற்றைப் புகைப்படங்கள் எடுத்து ஒரு கூகுள் டிரைவில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

– ஷான் (கணையாழி – நவம்பர் 2016)

கற்றலின் தருணங்கள்

கிராமப்புறத்தில் படித்து கல்லூரிகளில், வேலைகளில் சேரும் இளைஞர்கள் சந்திக்கும் பிரச்னைகளை நேரடியாக அறிந்தவன் என்ற முறையில் அது குறித்து நம்மைப் போன்ற சூழலில் இன்று படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுடன் உரையாடவேண்டும் என்ற எண்ணம் கடந்த சில ஆண்டுகளாகவே இருந்தது. ஆனால் அதற்கான திட்டமிடல், சூழல் ஆகியவை அமையவில்லை. வா.மணிகண்டன் தனது நிசப்தம் தளத்தில் அது குறித்த பதிவொன்றை இட்டபோது உடனே எனது ஆர்வத்தைத் தெரிவித்திருந்தேன். டிசம்பர் 4 வருகிறீர்களா என்று கேட்டபோது எனக்கு என்ன வேலை என்று கேட்காமலே சரி என்று சொல்லிவிட்டேன். பன்னிரண்டாவது வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம் என்பது குறித்து நான் பேச வேண்டுமென்று அதற்குப் பிறகுதான் முடிவானது. நிகழ்வை வடிவமைத்த ராதாகிருஷ்ணனுடன் பேசி சில திட்டங்களை வகுத்தோம்.

என்னதான் ப்ளான் பண்ணினாலும் மூர்ஸ் விதி விளையாடும் என்பதற்கு ஏற்ப முன்பதிவின்போது காத்திருப்பில் இருந்த ரயில் இருக்கை, மூன்று எண்ணிலேயே நின்றுவிட்டது. இரவில் பஸ் டிக்கெட் இருந்தது. ஆனால் நம்மை நம்பி பலரை அழைத்து நடத்தும் நிகழ்வுகளில் அப்படி ரிஸ்க் எடுக்கக் கூடாது என்ற முன் அனுபவம் இருந்தது. அடித்துப் பிடித்து ஓடி மூன்றாம் வகுப்பு சீட்டு வாங்கிப் போனால் ஏதோ திருமண முகூர்த்தமாம். கதவருகில் ஏழு கோணலாக நிற்க மட்டுமே இடம் கிடைத்தது. காட்பாடி வந்தபோது மூன்று கோணலாக நிற்க முன்னேற்றம். சேலம் வரை கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் அப்படியே பிரயாணம். ஜீவ கரிகாலனின் டிரங்குப் பெட்டிக் கதைகளை நின்றபடியே வாசித்து முடித்தேன். இரவு வேலை முடித்துக் கிளம்பியதால் கண்கள் வேறு சொக்கிக் கொண்டு வந்தது.

வீட்டுக்கு வந்து தூங்கியபோது இரவு 11. காலையில் கல்லூரியில் படிக்கும் அண்ணன் மகன் சபரியை உடன் அழைத்துக் கொண்டு ஸ்கூட்டரில் செல்ல ஏற்பாடு. எங்கே வரவேண்டுமென்று கேட்டுக் கொள்ளவில்லையென்று அப்போதுதான் நினைவுக்கு வந்தது. மணியோடு பேசி வழி கேட்டுக் கொண்டு காலை 9 மணியளவில் அங்கே சென்று சேர்ந்தேன். பிறரும் வந்து சேர்ந்துகொள்ள நிகழ்வு ஆரம்பம். அது வரையில் வளர்ந்த வேலைக்கு வந்த ஆட்களுக்கு வகுப்பெடுத்த அனுபவம் மட்டுமே இருந்ததென்பதால் எனக்கும் இது கற்றுக் கொள்ளும் வாய்ப்புதான். அது நிறையவே கிடைத்தது. இந்த நிகழ்விற்கு வந்திருந்து ஆதரவளித்தவர்கள், முன்னின்று திட்டமிட்டு நடத்தியவர்கள் குறித்த விவரம் மணியின் இந்தப் பதிவில் இருக்கிறது. எனவே அதற்குள் நான் போகவில்லை.

http://www.nisaptham.com/2016/12/blog-post_9.html?m=1

ஷான் என்ற பெயரும், பிரெஞ்சுத் தாடியும், அலுவலக வழக்கத்தால் வார்த்தைக்கு வார்த்தை வந்து விழுந்த ஆங்கிலமும்  தாண்டி மாணவர்களின் அலைவரிசைக்கு வந்து சேரக் கொஞ்சம் நேரம் பிடித்தது. நான் பயன்படுத்திய சில ஆங்கிலவார்த்தைகளுக்கு தனக்கே அர்த்தம் தெரியாது என்றான் பிஏ ஆங்கிலம் படிக்கும் அண்ணன் மகன் சபரி. இது குறித்து மணியும் சுட்டிக் காட்டினார். இந்த நகரவாழ்க்கையும் கார்ப்பரேட் வேலையும் நமது மண்ணில் இருந்து நம்மை எத்தனை அன்னியப்படுத்துகிறது என்பதை உணர்ந்த நேரம். எழுதும் போது வரும் தமிழ் பேசும்போது வர மறுத்தது. மதியவேளையில் முடிந்த அளவு அதைத் தவிர்த்து  தமிழுக்கு மாறி அவர்கள் மனதிற்கு ஏற்ற வகையில் வந்து சேர்ந்து கொண்டேன் என்று சொன்னார் நிகழ்வைத் திட்டமிட்டு நடத்திக் காட்டிய தலைமையாசிரியர் தாமஸ். அதே நேரம் நானும் அவர்களைப் போன்ற ஒரு அரசுப் பள்ளி மாணவன்தான் என்றும் முயன்றால் ஆங்கிலம் என்ற மொழியை மட்டுமல்ல, எந்த மொழியையும் வசப்படுத்தலாம் என்ற செய்தியையும் சொல்ல அதுவும் உதவியது என்று நம்புகிறேன்.

img_20161204_113922

இவையெல்லாம் இன்டர்நெட்டில் இலவசமாகக் கிடைக்கும், மாலையே சென்று பார்த்துவிடுங்கள் என்று கெத்தாக வலைத்தள முகவரிகளெல்லாம் கொடுத்துவிட்ட பிறகு அந்த எழுபத்தைந்து பேரில் எத்தனை பேருக்கு இணையத்தை அணுக முடியும் என்ற கேள்வி எழுந்தது. கை உயர்த்தியது பத்து பேர் கூட இல்லை. அதுவும் மாணவிகள் பக்கம் ஒரு கரம் கூட எழவில்லை. முகத்தில் அறையும் உண்மை. வாட்ஸ்ஆப் மூலம் இரண்டாம் வகுப்புப் பாடங்களைப் பகிர்ந்து கொள்ளும் நகரத்துப் பிள்ளைகளுக்கும் அங்கே இணையத்தைக் கண்ணால் கூடப் பார்த்திராத பன்னிரண்டாம் வகுப்பில் இருக்கும் மாணவிகளுக்கும் உள்ள வித்தியாசம் நேரில் கண்டபோதுதான் புரிந்தது. ஒரே பொறியியல் அல்லது மருத்துவ சீட்டுக்கு இவர்கள் போட்டியிடுகிறார்கள் என்பதுதான் உண்மை. இவையெல்லாம் எத்தனை செய்திகளைப் படித்தாலும் விளங்காது. அந்தக் குழந்தைகளோடு நேரடியாகப் பேசினால்தான் புரியும். காலுக்கு அடியில் விரிப்பை உருவியது போலிருந்தது. இது தொடர்பாக அரசுப் பள்ளிகளில் கணக்கெடுப்பு நடத்தி ஒரு திட்டத்தை உருவாக்குவது அரசு முன்னெடுக்க வேண்டிய முக்கியமான பணியாக இருக்கும்.

பன்னிரண்டு வருடங்களும் யாராவது சொல்வதை உள்வாங்கியே பழகிய காதுகள். எதிர்த்துப் பேசாமலிருக்கப் பழகிய வாய்கள். எங்களையும் ஆசிரியர்கள் போலவே பாவித்தார்கள். அதை உடைப்பதுதான் பெரிய சவாலாக இருந்தது. ஆசிரியர்கள் உடனிருந்தது சில நேரங்களில் உதவியாக இருந்தாலும் அதைத் தவிர்த்துப் பார்த்திருக்கலாமோ என்றும் தோன்றியது. ஆனால் அங்கே கலந்து கொண்ட ஒரு மூத்த ஆசிரியை தனது அனுபவத்தில் இப்படி ஒரு ஆளுமைத் திறன் குறித்த பயிலரங்கு அரசு மாணவர்களுக்கு நடத்தப்பட்டதில்லை என்று கூறினார். தனக்குமே அது புதிதாக இருந்தது என்றார். அப்பாடா என்றிருந்தது.

வந்திருந்த மாணவ, மாணவிகளில் பெரும்பாலானவர்கள் தாங்கள் என்ன படித்தால் வேலை கிடைக்கும் என்ற வழிகாட்டல் கிடைக்குமென்ற நோக்கத்துடன் வந்திருந்தார்கள் என்பது புரிந்தது. இந்தப் படிப்பு படித்தால் கட்டாயம் வேலை கிடைக்கும் என்று யாராவது உங்களிடம் சொன்னால் நம்பி விடாதீர்கள் என்று அவர்களிடம் புரிய வைப்பதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது. தங்கள் வாழ்க்கைக்கு எது தேவையென்று சுயமாக முடிவெடுக்கும் ஆளுமைத் தன்மையை வளர்த்துக் கொள்வது எப்படியென்று நிறையப் பேசினோம். கேள்வி கேட்பது எவ்வளவு முக்கியமென்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தினோம். மதிய நேரத்தில் இறுக்கம் மறைந்து நிறைய பேசத்தொடங்கினார்கள். தனிப்பட்ட கேள்விகளைப் பலர் வந்து கேட்கத் தொடங்கியிருந்தார்கள். இறுதியில் மூன்று நான்கு மாணவ மாணவிகள் அந்த நாளைப் பற்றி மேடையேறிப் பேசியது ஹை லைட். அதுதான் இந்தப் பயிலரங்கின் வெற்றியும் கூட.

பன்னிரண்டாம் வகுப்பில் வெற்றி பெறுவது குறித்தும் நிறையப் பேசினோம். அதே நேரம் கல்லூரியில் சேர்வது, வேலையில் சேர்வது ஆகியவற்றைத் தாண்டி வாழ்க்கையில் வெல்ல என்ன மாதிரியான திறமைகளை வளர்த்துக் கொள்வது அவசியம் என்பது குறித்தும் நிறையவே பேசினோம். அனைவரும் செல்லும் பாதை என்பதால் மட்டுமே அது சரியான பாதையாக இருந்துவிட முடியாதென்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தினோம். மறக்க முடியாத நாளென்று மாணவ, மாணவிகள் இறுதியில் சொன்னார்கள். முகநூல் நண்பர்கள் வந்திருந்து வாழ்த்தினார்கள். எங்களிடமிருந்து அவர்கள் என்ன கற்றுக் கொண்டார்கள் என்பது ஒரு புறமிருக்க, அவர்களிடமிருந்து நான் நிறையவே கற்றுக் கொண்டேன். இன்னொரு முறை இதை நடத்த வாய்ப்பு கிடைத்தால் எங்கே எப்படி மெருகேற்ற வேண்டும் என்றும் புரிந்தது. இதை நடத்தத் தகுதியான இன்னும் இருவரின் பெயர் மனதில் ஓடுகிறது. ஒரு பத்து பேரை அடையாளம் கண்டு வைத்து விட்டால், யாரால் முடிகிறதோ அவர்கள் சென்று நடத்த முடியும்.

அன்று எங்கள் முன்பாக அமர்ந்திருந்ததுதான் இந்த மண்ணின் எதிர்காலம். விதைகளை வீசிவிட்டு சிறிது நீரூற்றிவிட்டு வந்திருக்கிறோம். நிகழ்வின் ஒரு பகுதியாக ஒரு தாளில் ஒவ்வொருவரும் தங்கள் பெற்றோர், பள்ளி, நாடு, இயற்கை ஆகியவற்றிடம் இருந்து என்ன பெற்றுக் கொண்டோம், என்ன தந்திருக்கிறோம் என்பதை எழுதச் சொன்னோம். அப்படி ஒரு காகிதத்தை நான் எழுதினால் என்ன பெற்றிருக்கிறோம் என்பதை எழுத பக்கங்கள் போதாது. இனி அதிலிருந்து கொஞ்சமாவது நான் திரும்பத் தரும் நேரம். அதற்கான முதல் வரியை இந்த நிகழ்வில் பங்கெடுத்ததன் மூலம் எழுதியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

– ஷான்.

கொண்டாட முடியாத சாதனை

முப்பது வருடங்களுக்கு முன்னால் கொடிய ஹெச்ஐவி வைரஸ் தன்னுடைய மண்ணை அடைந்ததைக் கண்டுபிடித்தது இந்தியா.சென்னையைச் சேர்ந்த ஆறு பாலியல் தொழிலாளிகளின் ரத்த மாதிரிகளில் ஹெச்ஐவி வைரஸ் இருப்பது அறியப்பட்டது. பல சிரமங்களுக்கிடையில் கடுமையாக உழைத்து இதை நிகழ்த்திய ஒரு இளம் விஞ்ஞானியின் சாதனை நாளடைவில் மறக்கப்பட்டுவிட்டது.

எய்ட்ஸ் சோதனைகளை நடத்தவேண்டும் என்று முதலில் அவரிடம் கூறப்பட்ட போது பெரிதும் தயங்கினார் நிர்மலா செல்லப்பன்.

அது 1985ம் ஆண்டின் இறுதிப் பகுதி. சென்னை மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த 32 வயது மைக்ரோபயாலஜி மாணவியாக அவரது ஆய்வுக்காக ஒரு தலைப்பை அவர் தேடிக் கொண்டிருந்தார்.  

அவரது பேராசிரியர் சுனிதி சாலமன் தமிழ்நாட்டில் எய்ட்ஸ் இருக்கிறதா என்று சோதிக்கும்  யோசனையை அவரிடம் கூறினார். எய்ட்ஸ் என்ற நோயின் பரவலைக் கண்காணிக்கும் பணியை அமெரிக்கா 1982ல் தொடங்கிவிட்டது. இந்தியாவும் அசட்டையாக இல்லாமல் இந்த விஷயத்தில் விழிப்பாக இருக்கவேண்டும் என்று அவர் கருதினார்.

ஆனால் அந்த நேரத்தில் இந்தியாவில் எய்ட்ஸ் என்பதெல்லாம் கற்பனைக்கும் எட்டாத விஷயம் என்கிறார் நிர்மலா.எய்ட்ஸ் என்பது ஒழுங்கீனமாக மேற்கு நாகரிகத்தின் வியாதி என்று பத்திரிகைகள் எழுதி வந்த காலம் அது. அங்கேதான் கட்டுப்பாடற்ற பாலுறவு, தன்பாலின உறவு ஆகியவை இருப்பதாக இந்தியர்கள் நம்பினார்கள். இந்தியர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையில் கடவுள் பக்தியோடு வாழும் உன்னதமான சமூகம் என்பதால் எய்ட்ஸ் என்ற நோய் இங்கே பரவ வாய்ப்பில்லை என்று நம்பப்பட்ட காலம் அது. எய்ட்ஸ் பற்றி எழுதிய சில செய்தித்தாள்கள் கூட அந்த வைரஸ் இந்தியாவை அடைவதற்கு முன்பாக அமெரிக்காவில் அதற்கு மருந்து கண்டுபிடித்துவிடுவார்கள் என்று நையாண்டி செய்திருந்தார்கள்.

பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட மும்பையில் இருந்து சேகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ரத்த மாதிரிகள் புனேவில் எற்கெனவே சோதிக்கப்பட்டு ஒருவருக்குக் கூட எய்ட்ஸ் இல்லை என்று நிரூபிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மரபுகளைப் பின்பற்றும் சமூகங்கள் வாழும் பகுதிகள். எனவே நிர்மலா தன்னுடைய ஆய்வை ஒரு தயக்கத்துடனே அணுகி இருக்கிறார். “நான் டாக்டர் சாலமனிடம் எப்படியும் முடிவுகள் எதிர்மறையாகவே இருக்கும் என்று கூறினேன்” என்கிறார்.

ஆனால் சாலமன் அவரை சமாதானம் செய்து இந்த ஆய்வை செய்து பார்க்கும்படி கூறினார். அதன்படி நிர்மலா 200 ரத்த மாதிரிகளை நோய் தொற்றும் வாய்ப்பு அதிகம் உள்ள பாலியல் தொழிலாளிகள், தன்பாலின உறவாளர்கள் மற்றும் ஆப்பிரிக்க மாணவர்கள் ஆகியோரிடமிருந்து சேகரிக்க வேண்டும். ஆனால் இது சுலபமான காரியம் அல்ல. இதற்கு முன் நிர்மலா லெப்டோஸ்பைரோஸிஸ் என்ற பாக்டீரியாவின் மூலம் பரவும் நோய் குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்தார். நாய்களிடம் இருந்தும் எலிகளிடம் இருந்தும் மனிதர்களுக்குப் பரவும் நோய் அது. அவருக்கு ஹெச்ஐவி பற்றியோ எய்ட்ஸ் பற்றியோ எதுவும் தெரியாது.

_90936901_black-and-white

அது மட்டுமல்ல, இந்த மாதிரிகளை எங்கு சேகரிக்கவேண்டும் என்பது பெரிய சவாலாக இருந்தது. மும்பை, டெல்லி, கல்கத்தா போன்ற நகரங்களில் பாலியல் தொழில் நடக்கும் சிவப்பு விளக்குப் பகுதிகள் தனியாக இருந்தன. சென்னையில் அப்படி எந்த முகவரியும் இல்லை. எனவே அவர் சென்னை அரசு மருத்துவமனையில் பாலியல் நோய்களுக்காக சிகிச்சை எடுக்க வரும் பெண்களை சந்திக்கத் தொடங்கினார்.

“அங்கே நான் சில பாலியல் தொழிலாளிகளை அறிமுகம் செய்து கொண்டேன். அவர்கள் எனக்கு வேறு சிலரை அறிமுகம் செய்தார்கள். அவர்களது படிவத்தைப் பார்த்தபோது “வி ஹோம்” என்று எழுதி இருந்தது. அது பற்றி விசாரித்தபோது அது ‘விஜிலன்ஸ் ஹோம்’ என்று தெரியவந்தது. பாலியல் தொழில் செய்பவர்களைக் கைது செய்து அடைக்கும் இடம் அது.”

பாலியல் தொழிலுக்கு அழைத்தல் என்பது இந்தியாவில் இப்போதும் சட்ட விரோதம். அதற்காக கைது செய்யப்படும் பெண்கள் ஜாமீன் பணம் கொடுக்க வழி இல்லாமல் சிறையில் அடைக்கப்படுவது வழக்கமான விஷயம். எனவே வேலைக்குப் போகும் முன்பாக ஒவ்வொரு நாள் காலையும் நிர்மலா அங்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.

நிர்மலா ஒரு சிறிய கிராமத்தில் பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர் என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு சிறு குழந்தைகளின் தாய். “நான் தமிழில் மட்டுமே பேசக்கூடிய கூச்ச சுபாவமுள்ள பெண், ஒரு அமைதியான வாழ்க்கையையே நான் என்றும் விரும்பினேன்” என்கிறார்.

ஆனால் அவருக்கு தைரியம் சொல்லி அவருக்கு ஒவ்வொரு படியிலும் ஊக்கம் அளித்தவர் அவரது கணவர் வீரப்பன் ராமமூர்த்தி. இந்த ஆய்வுக்கென்று செலவளிக்க அவர்களிடம் பணம் இல்லை. எனவே தனது ஸ்கூட்டரில் மனைவியைக் காவல் நிலையத்தில் கொண்டு விட்டு மீண்டும் அழைத்துப் போகும் வேலையை ராமமூர்த்தி செய்தார். இதன்மூலம் பஸ் கட்டணத்தையாவது மிச்சம் பிடிக்கலாம் என்று கருதினர் அந்தத் தம்பதியினர்.

_90940245_husband

இப்படியாக மூன்று மாதங்களில் 80 ரத்த மாதிரிகளை சேகரித்தார் நிர்மலா. அவரிடம் கையுறைகளோ எந்தப் பாதுகாப்புக் கருவிகளோ இல்லை. பாலியல் தொழிலாளர்கள் தங்கள் ரத்தம் எதற்காக சோதிக்கப்படுகிறது என்பதை அறிந்திருக்கவில்லை.

“அது எய்ட்ஸ் சோதனை என்று நான் சொல்லவில்லை” என்கிறார். “அவர்கள் படிப்பறிவில்லாதவர்கள், அப்படியே சொன்னாலும் அந்த நாட்களில் அவர்களுக்கு எய்ட்ஸ் என்றால் என்னவென்று புரிந்திருக்காது. பாலியல் வியாதிகளுக்காக தாங்கள் சோதிக்கப்படுவதாக அவர்கள் நினைத்தார்கள்.”

சாலமனின் கணவர் இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர். அவரிடம் இருந்து சில சோதனைக் கருவிகளை இரவல் வாங்கி சாலமனும் நிர்மலாவும் ரத்த மாதிரிகளில் இருந்து சீரத்தைப் பிரித்து எடுக்கும் வேலையைச் செய்து முடித்தார்கள். எய்ட்ஸ் பரிசோதனையில் இது ஒரு முக்கியமான கட்டம். இவற்றைச் சேமித்து வைக்க சரியான வசதிகள் இல்லாமல் தனது வீட்டின் குளிர்பதனப்பெட்டியில் வைத்துக் காத்திருக்கிறார் நிர்மலா.

சென்னையில் எலிசா சோதனை செய்ய அப்போது வசதிகள் இல்லாத காரணத்தால் டாக்டர் சாலமன் மாதிரிகளை வேலூர் கிறிஸ்டியன் மெடிக்கல் மிஷன் (சிஎம்சி)யில் சோதிக்க எற்பாடு செய்தார். இது சென்னையில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ளது.

“1986 பிப்ரவரி மாதத்தின் ஒரு நாளில் நானும் எனது கணவரும் ரத்த மாதிரிகளை ஒரு ஐஸ் பெட்டியில் வைத்து எடுத்துக் கொண்டு காட்பாடிக்கு ரயில் ஏறினோம். அங்கிருந்து ஒரு ஆட்டோ ரிக்‌ஷா மூலம் சிஎம்சியை அடைந்தோம்.”

அங்கே வைராலஜி துறையின் இயக்குனர் ஜேக்கப் டி ஜான் இரண்டு மருத்துவர்களை நிர்மலாவுக்கு உதவ நியமித்திருந்தார்.

“காலை 8:30 மணிக்கு சோதனையைத் தொடங்கினோம். மதியவேளையில் மின்வெட்டு ஏற்பட்டதால் டீ சாப்பிடச் சென்றோம். நானும் டாக்டர் ஜார்ஜ் பாபுவும் லேபுக்கு முதலில் திரும்பினோம்.”

“அவர் மூடியைத் திறந்து பார்த்துவிட்டு உடனே வேகமாக மூடிவிட்டார். ‘டோண்ட் ப்ளே’ என்று கூவினார். ஆனால் அதற்குள் நானும் பார்த்துவிட்டேன். ஆறு மாதிரிகள் மஞ்சள் நிறத்துக்கு மாறி இருந்தன. நான் உறைந்துவிட்டேன். இதுபோல் நான் எதிர்பார்த்திருக்கவில்லை.”

சிறிது நேரம் கழித்து சிமியோஸ் வந்தார். முடிவுகளை சோதித்த அவர் “சில மாதிரிகளில் பாசிடிவ் முடிவு வந்துள்ளது” என்று சொல்லிவிட்டு அவசரமாக இயக்குனர் ஜானை அழைக்கச் சென்றார். செய்தி கேட்ட அவர் அறைக்குள் ஓடி வந்தார்.

ஆனால் மறுப்பதற்கு அங்கே எதுவும் இல்லை. முடிவுகள் எங்கள் முகத்தில் அறைவது போல் அங்கே தெளிவாக இருந்தன. “இந்த மாதிரிகளை எங்கே சேகரித்தீர்கள்” என்று விசாரித்தார் ஜான். சென்னைக்குத் திரும்பும் முன்னாக நிர்மலாவும் அவரது கணவரும் இந்த முடிவுகளை ரகசியமாகப் பராமரிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

“இது மிகவும் சென்சிடிவான விஷயம் என்று சொன்னார்கள். யாரிடமும் சொல்லவேண்டாம் என்று எங்களிடம் கூறப்பட்டது” என்கிறார் ராமமூர்த்தி. சென்னைக்குத் திரும்பிய பிறகு சாலமனின் அலுவலகம் சென்று அவரிடம் இந்த செய்தியைக் கூறினார் நிர்மலா.

மீண்டும் விஜிலன்ஸ் ஹோம் சென்றார் நிர்மலா. ஆனால் இந்தமுறை சாலமன், பாபு மற்றும் சிமியோஸ் உடன் இருந்தார்கள். அந்த ஆறு பெண்களிடம் மீண்டும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. சிமியோஸ் அந்த மாதிரிகளுடன் அமெரிக்கா பறந்தார். அங்கே செய்யப்பட்ட வெஸ்டர்ன் ப்லாட் டெஸ்ட் கொடூரமான ஹெச்ஐவி வைரஸ் இந்தியாவில் நுழைந்துவிட்டதை உறுதி செய்தது. இந்த சோகமான செய்தி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் தெரிவிக்கப்பட்டது. பிறகு அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியிடமும் தமிழகத்தின் சுகாதார அமைச்சர் ஹெச்வி ஹண்டேவிடமும் தெரிவிக்கப்பட்டது.ஹண்டே இந்தக் கெட்ட செய்தியை சட்டசபையில் மே மாதம் அறிவித்தபோது நிர்மலாவும் சாலமனும் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்தார்கள்.

இந்த செய்தியை முதலில் கேட்டதும் மக்கள் நம்ப மறுத்தார்கள். சோதனையில் தவறு இருக்கலாம், மருத்துவர்கள் தவறிழைத்திருக்கலாம் என்று பலர் விவாதித்தார்கள். சமீபத்தில் காலமான சாலமன், வெளிமாநிலமான மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பதால் இந்த விஷயத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்தார்.

“தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர், ஒரு வட இந்தியப் பெண் நம்மை அசுத்தமானவர்கள் என்று சொல்கிறார் என்று குற்றம் சாட்டினர். ஆனால் அனைவருமே அதிர்ச்சியில் இருந்தார்கள். என் அம்மா உட்பட.” என்கிறார் அவரது மகன் சுனில் சாலமன். அதிகாரிகளும் அரசும் அதன் பிறகு அவசர அவசரமாக திட்டங்களை வகுக்கத் தொடங்கினார்கள்.

“இது வெறும் ஆரம்பம்தான் என்றார் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் டைரக்டர். நாம் அதிவிரைவில் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று என்னிடம் கூறினார்” என்கிறார் நிர்மலா.

அதன் பிறகு அரசு மிகப்பெரிய அளவில் ஹெச்ஐவி சோதனை மற்றும் தடுப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இன்று ஹெச்ஐவி-எய்ட்ஸ் என்பது இந்தியாவில் ஒரு பெரிய தொற்று நோயாக வளர்ந்து நாட்டின் எல்லா மூலைகளிலும் பரவி இருக்கிறது. சாலமன் மற்றும் நிர்மலாவின் முயற்சி இல்லாவிட்டால் இன்னும் சில வருடங்களுக்கு இந்தியாதான் உலகின் ஒழுக்கமான நாடு என்றும் ஹெச்ஐவி இந்திய எல்லைக்குள் நுழையாது என்றும் நம்பி பல லட்சம் உயிர்களைப் பலி கொடுத்திருப்போம்.

அதன் பிறகு பல ஆண்டுகளுக்கு இந்தியாதான் உலகிலேயே ஹெச்ஐவி தொற்று அதிகம் உள்ள நாடாக நம்பப்பட்டது. 52 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதினார்கள். ஆனால் 2006ல் இந்த எண்ணிக்கை பாதியாக மதிப்பிடப்பட்டது. ஆனால் இன்றும் 21 லட்சம் மக்கள் இந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இன்று வரை மருந்து இல்லை. சாவுதான் முடிவு.

நிர்மலா மீண்டும் தனது ஆய்வுக்குத் திரும்பினார். அவரது ஆய்வை முடிக்க இன்னும் 100க்கு மேல் மாதிரிகள் தேவைப்பட்டன. அடுத்த சில வாரங்கள் அவர் சிறைச்சாலைகளுக்குச் சென்று பாலியல் தொழிலாளர்களிடமும் தன்பாலின உறவாளர்களிடமும் மாதிரிகளை சேகரித்தார். மார்ச் 1987ல் அவர் “சர்வைலன்ஸ் பார் எய்ட்ஸ் இன் தமிழ் நாடு” என்ற தனது ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். தனது தேர்வுகளை எழுதித் தேர்ந்து சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட் ஆப் ப்ரிவெண்டிவ் மெடிசினில் நோய்த் தடுப்புத் திட்டத்தில் வேலைக்குச் சேர்ந்தார். 2010ல் ஓய்வு பெற்றார்.

இந்தியாவில் ஹெச்ஐவி-எய்ட்ஸ் இருப்பதை உறுதிப்படுத்திய சாதனையை நிர்மலா நிகழ்த்தி முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரை முற்றிலுமாக மறந்துவிட்டது உலகம். அப்போதைய சூழலில் வந்த சில செய்திகளைத் தவிர அவருக்குப் பெரிய அங்கீகாரம் எதுவும் கிடைத்திருக்கவில்லை. எப்போதாவது உங்களுக்கு வேண்டிய அங்கீகாரம் தரப்படவில்லை என்று வருத்தப்பட்டதுண்டா என்று கேட்டபோது,

“நான் கிராமத்தில் வளர்ந்தவள். அங்கே இதைப் பற்றிப் புரிந்து மகிழ்ச்சி கொள்ளவோ வருத்தப்படவோ யாருமில்லை. எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தமைக்கும் என்னால் முடிந்ததை இந்த சமுதாயத்துக்கு செய்ய இயன்றதற்கும் நான் மகிழ்ச்சியே அடைகிறேன்.” என்கிறார் நிர்மலா.

ஆங்கிலத்தில் – கீதா பாண்டே – பிபிசி இணையதளம் (http://www.bbc.com/news/magazine-37183012)

தமிழில் – ஷான் கருப்பசாமி

பனாமா ஆவணங்கள்

சட்டவிரோதமான பணத்தைப் பதுக்க உதவும் சட்ட நிறுவனங்களில் உலகிலேயே முதன்மையானதாகக் கருதப்படும் மொசாக் ஃபொன்சேகாவின் ரகசிய ஆவணங்கள் பொதுவில் வெளியாகியுள்ளன. இந்திய அரசியலிலும் இது கலக்கத்தை உருவாக்கியுள்ளது. இது பற்றி சில விவரங்கள்:

– பல நாடுகளில் இருந்து பத்திரிகையாளர்கள் இணைந்து செயலாற்றி இதை வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். வரலாற்றில் இவ்வளவு பெரிய கசிவு இதுவே முதல் முறை.

– 40 ஆண்டுகள் பழமையான, ஒரு கோடிக்கும் மேலான ஆவணங்கள், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழல் நிறுவனங்கள், இருநூறு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் பெயர்கள் இதில் அடக்கம்.

– 140 அரசியல்வாதிகள், தலைவர்கள் பெயர்கள் இதில் உள்ளன. முக்கியமாக ஐஸ்லாந்து பிரதமர் (ராஜினாமா செய்து விட்டார்), பாகிஸ்தான் பிரதமர், உக்ரைன் பிரதமர், சவுதியின் அரசர் ஆகியோர்.

– ரஷ்யாவின் அதிபர் புடினுக்கு நெருக்கமானவர்கள் செய்த இரண்டு பில்லியன் டாலர்கள் அளவான பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

– எச்எஸ்பிசி உள்ளிட்ட 500க்கு மேற்பட்ட வங்கிகள் பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட நிழல் நிறுவனங்களை உருவாக்க உதவியுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.

– இந்தத் தகவல்களை ஆராய்ந்து வெளிட்டவர்கள் ஐசிஐஜெ எனப்படும் துப்பறியும் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு. காழ்ப்புணர்ச்சி, அரசியல் விரோதிகள் என்றெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது.

– இந்த நிறுவனம் பனாமாவில் இருந்தாலும் இவர்களை அணுகினால் உலகெங்கும் பணத்தைப் பதுக்க உதவி செய்கிறார்கள். கம்பெனிகளை ஆரம்பித்து ஒரே ஆண்டில் மூடிப் பணத்தை வேறு கம்பெனிக்கு மாற்றிக் கொண்டே இருப்பார்கள். ஆடிட்டிங் செய்வது கடினம். அந்த வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் பணத்தைக் கொடுத்துவிட்டால் போதும். எந்த அளவு என்றால் 2010ல் மட்டும் பத்தாயிரம் நிறுவனங்களை ஆரம்பித்து எட்டாயிரம் நிறுவனங்களை மூடி இருக்கிறார்கள்.

– ஹாங்காங், சுவிஸ், பிரிட்டன் இங்குதான் இவர்களது புரோக்கர்கள் இருக்கிறார்கள். பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள்தான் பணம் பதுக்க வாகான இடமாக 2005 வரை இருந்திருக்கிறது. அதன் பிறகு பனாமா அந்த இடத்தைப் பிடித்து வளர்ந்திருக்கிறது.

உலக வரைபடத்தில் வெற்றிலை எச்சில் தெரித்தது போல இருக்கும் குட்டி நாடான பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் இந்த நிறுவனம் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேலான கம்பெனிகளை ஆரம்பித்துக் கொடுத்துள்ளது. ஒரு கோவணத்தைப் போலிருக்கும் பனாமாவில் ஐம்பதாயிரம் கம்பெனிகள். இது போல இன்னும் பல புரோக்கர்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

ஊழல்வாதிகள் பரிணாம வளர்ச்சி பெற்று வங்கிகளில் இருந்து பணத்தை எடுத்து வேறு வழிகளில் பதுக்க ஆரம்பித்து நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. இந்திய அரசியலில் இன்னும் சுவிஸ் வங்கிகளைப் பற்றிப் பேசிக் கொண்டு அங்கிருந்து பணம் வரும் என்று நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாமும் அந்த திசையில் வாயைப் பிளந்து வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

– ஷான்.

ள் – விமர்சனம் – லதா அருணாசலம்

கவிதைகள் வாசிப்பதென்பது எப்போதுமே மனதுக்குப் பிரியமானதொரு அனுபவம்..அது ஒரு நிகழ்கால நிதர்சனங்களிலிருந்து கணப் பொழுது , மனங் கடத்தி வேறொரு உலகை இரவல் தருகிறது..அதே சமயம், இடம் பிறழ்ந்தலையும் மனதை நிதர்சனத்தை நோக்கி நகர்த்தவும் உதவுகிறது. இதன் கச்சிதமான உதாரணம் ஷான் படைப்பான “ள்”
“ள் , என்ன ஒரு வசீகரத் தலைப்பு..இந்த தலைப்பே ஒரு ஆவலை ஏற்படுத்தியது. ஷான் எப்போதுமே பெண்களுக்கான இருப்பை, அவர்களின் உரிமையை ஒரு ஆக்ரோஷத்துடன் நிலை நிறுத்துவார்..அவரது கருத்துகளில் மறைமுகமான சாடல்கள் வைக்காமல், நேரடியாக தன் நிலைப்பாட்டை தெரிவிப்பார்.அப்போதெல்லாம் வியந்து போனதற்கு இந்தக் கவிதைத் தொகுப்பில் விடை கிடைத்துள்ளது..
எந்த சூழ்நிலையிலும் மயங்காது, உறுதியுடன் நின்று அவரை வளர்த்தெடுத்த, வார்த்தெடுத்த , அவரது அன்னையின் செறிவும் தெளிவும், தாக்கமும் ஷானின் கவிதைகளில் ‘ள்’ ஆக எழுச்சி கொள்கிறது.அம்முவாக மனந் தொட்டுச் செல்கிறது.. விமானப் பணிப் பெண்ணின் தீண்டவியலாத அக அழகு ஒளியாக பரிமளிக்கிறது. .பளவரப் பாசிக் காரனின் கவிதையின் ஆன்மாவாக ஊடுருவி நிற்கிறது.

இதைக் காட்டிலும், கவிதைத்தொகுப்பின் கடைசியில் வரும், யானை நிறத்தவள் என் மனதுக்கு மிக உகந்த கவிதையாக இருக்கிறது.மிக முக்கியமான கவிதையாக இதைப் பார்க்கிறேன்.
நிறங்களால் நிராகரிக்கப் பட்டவர்களின் குரலாக அது ஓங்கி ஒலிக்கிறது.

“அதீதமான உதடுகள் உதிர்த்த
அதிர்ந்த சொற்களில் அலட்சிய பாவம்
அழகுப் போட்டிகள் நிராகரிப்பதை
காதல் கவிஞர்களின் புறக்கணிப்பை
திரைப்படங்களின் தீரா அவமதிப்பை
விளம்பரங்கள் விலக்கி வைப்பதை
திருமணங்கள் தள்ளிப் போவதை
மின்னும் பற்களிடையே நிறையப் பேசினாள்
ஒரு கருமாரி அம்மன் கோவில் நிறுத்தத்தில்தான்
இறங்கிக் கண் நிறைந்து போனாள் ”

இந்த வரிகளின் அடர்த்தி கணநேரம் மூச்சடைக்க வைத்தது. வெள்ளை நிற கிரீம்களின் உள்ளே நம்பிக்கையை நிரப்பி விற்கிறோம் என்ற பசப்பு வார்த்தை விளம்பரங்களின் மேல் உமிழ்வது மாதிரி ஒரு காரம் இதில்..நிறத்தின் பால் சமூகம் கொண்டுள்ள மோகத்தை இதைவிடத் தெளிவாகச் சொல்ல முடியுமா? கவிதையின் முடிவில் அவள் கண்நிறைந்து மட்டுமல்ல.. நம் மனம் நிறைந்தும் போகிறாள்..கவிதையில் , பேதங்களின் பிரம்மாண்டம் சொற்களின் வழி ஊடுருவி குற்ற உணர்வாய் பாவுகிறது..

இப்போது “ள்” கவிதை பற்றி சில வரிகளில் சொல்ல வேண்டுமென்றால்…வகுத்துக் கொண்டதும், வகுக்கப் பட்டதுமான கோட்பாடுகளை உடைக்கிறது இந்த ‘ள்’
அது “ள்” பற்றிய ஒரு பொதுப் புத்தியை கடைசி வரிகளில் அழித்துச் செல்கிறது..
அந்தப் பெண்பால் விகுதி , எதையெல்லாம் செய்தால் இந்த சமூகம் ஆத்திரப் படுமோ, கொந்தளிக்குமோ அதையெல்லாம் சாத்தியப் படுத்தி விட்டு , எள்ளலாக இதைக் கவிதை செய்கையில் அங்கு ள் என்று போடாதே, யாரையும் அதிர்ச்சிக் குள்ளாக்காதே என்று சொல்லிச் செல்கிறா’ள்’. அந்தத் தொனி மிக அழகாக, அந்த அலட்சியம் வரிகளில் இறங்கி, மனதில் நிலைபெறுமாறு காட்சிப் படுத்திச் செல்வதில் ஷான் அந்தக் கவிதையை நேர்த்தியாக வார்த்தைகளில் நெய்திருக்கிறார்.

நாளைய நாணயங்கள் கவிதை, சம காலத்தின் பெரும் பிரச்னையான மறுக்கப் பட்ட, பறிக்கப் பட்ட குழந்தைகளின் குழந்தைமையை ஏக்கத்துடன் விவரிக்கிறது.

“தொலைக்காட்சி விருது வேண்டி
உச்சக் குரலில் பாடி அழுகிறது
விளையாட்டைத் தொலைத்த பிள்ளை
கம்பிமேல் நடந்து வளையம் நுழைந்து
வயிற்றின் மீது தாயைச் சுமக்கிறது
பேருந்து நிலையத்தின் மழலை..”

நிர்ப்பந்தங்கள் வேறாக இருக்கலாம்..ஆனால் தொலைவது குழந்தைகளின் பால்யம்..அந்த ஆற்றொணா ஆதங்கம் வரிகளில் விரவியுள்ளது.

“முதுகெலும்புகளால் ஆன சாட்டை”

.வாழ்க்கையில் சதா குனிந்தும், நெளிந்தும், வளைந்தும் பழக்கப் பட்டே வாழும் மனிதர்களிடையே நிமிர்தலின் ஆச்சரியம் போலப் பேசும் ‘ கவிதையில் எத்தனை காத்திரம்? இப்படி சமூகமும் அதன் திணிக்கப் பட்ட விழுமியங்கள் மீதும் கேள்வி கேட்டு, நிறையக் கவிதைகள் அறச் சீற்றமாய் வெளிப் படுகின்றன.
வாசகர்களை நேரடியாகக் களத்திற்கு அழைத்துச்செல்ல முற்படுகிறது பல கவிதைகள்..பிரச்சனைகளை விட்டு அந்நியமாகாமல் , அலங்காரச் சொற்களால் சுற்றி வளைக்காமல் தன் கருத்துகளை நிர்மாணித்திருக்கிறார்..ஆனால் மிகச் சில கவிதைகளில் மொழியின் , பாடு பொருளின், அர்த்தம் தேடுவதில் , கவிதையிலிருந்து சற்று விலகுகிறோம். இன்னும் கொஞ்சம் மென்மையாக்க் கையாண்டிருக்கலாமோ என்று தோன்ற வைக்கிறது..ஆனாலும் கவிதையை வாசிப்பவர்களின் சுதந்திரமான கற்பனைக்கு விட்டுச் செல்வதே கவிதைகளின் அழகியல்..ஒவ்வொரு முறையும், ‘ள்’ , ஊதா நிற மச்சம், பறவையாயிருத்தல், அறிதழல், கால் உடைந்த மான் குட்டியை. வாசிக்கையில் புதிதாய் பயணம் மேற்கொள்கிறது கற்பனை..அதுதானே ஒரு கவிதையின் வெற்றி..கவிதைக்குப் பின்னான வாசிப்பனுபவத்தில் சூட்சுமங்களை தானே வகுத்துக் கொள்ளும் மனம்..

இந்தக் கவிதைகள் அனைத்துமே எளிமை என்று சொல்ல முடியாது..ஆனால் அபூர்வ நுண்ணுணர்வு இதன் மையமாக அதிகாரம் செய்கிறது..மனதைத் தட்டி எழுப்பும் நிகழ்வை நிகழ்த்துகிறது. இருத்தல், இல்லாமை, அழகியல், சூழலியல், நுண்ணரசியல், பெண்ணியம், இவற்றோடு அமெரிக்காவின் செந்தில் குமார்களிலிருந்து
கிராமத்தின் பளவரப் பாசிக்காரன் வரை நம்மிடம் உரையாட விடச் செய்த ஒரு விரிவான களத்தில் ஷானின் கவிதைகள் தம்மை நிலை நிறுத்துகின்றன. மிகுந்த பெருமையுடன் , வாசகர்களை வாசிக்கப் பரிந்துரைக்கிறேன்.

அருமையான , முழுமையான வாசிப்பனுபவம் ‘ள்’ வாழ்த்துகள் Shan Karuppusamy

‘ள்’ Shan Karuppuaamy
பார்வதி படைப்பகம்.
டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை.

நாளைய நம்பிக்கை

நம் அழுக்குகள் அத்தனையும் எப்படியோ நீர்நிலைகளை அடைந்து விடுகின்றன. அது கிணறோ சிற்றோடையோ ஆறோ ஏரியோ கடலோ மனிதனின் தவறுகளுக்கு முதலில் பலியாவது அதுதான். பொதுவாக நீர் நிலைகள் சுத்தமாக இருக்கும் நாடும் ஊரும் சுத்தமாகவே இருக்கும்.

ஏழாவது ஆண்டாக சென்னை ட்ரெக்கிங் கிளப் நடத்தும் கோஸ்டல் கிளீன் அப் நிகழ்வில் கலந்து கொண்டேன்.
இந்த ஆண்டில் இருபது கிலோமீட்டர் கடற்கரை சுத்தம் செய்யப்பட்டு 35 டன் குப்பை சேகரிக்கப்பட்டு இனம் பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை குப்பைகளை இனம் பிரிப்பதுதான் தீம். நம்முடைய குப்பைகளை வீட்டிலேயே பிரிப்பதன் மூலம் தொண்ணூறு சதவீத குப்பைகளைக் குறைக்க முடியும் என்கிறது புள்ளி விவரம்.

ஆனால் பலருக்கும் இந்த மக்கும் குப்பை, மக்காத குப்பை, மறுசுழற்சி செய்ய முடியும் குப்பை போன்றவற்றில் குழப்பம் இருப்பதைக் காண முடிந்தது. மக்கும் குப்பை என்பது தாவர, உணவுக் கழிவுகள். அவற்றை உரமாக்கி வீட்டிலேயே தோட்டம் அமைத்துவிடுங்கள் என்கிறார்கள். மக்காத குப்பைகளில் பிளாஸ்டிக் பொருட்களான பாலிதீன் பைகள், கோப்பைகள், கண்ணாடி பாட்டில்கள் போன்றவை மறு சுழற்சிக்குத் தயாரானவை. இது தவிர அனைத்து மக்காத குப்பைகளையும் குப்பை மேட்டுக்கு அனுப்பலாம். ஆனால் நமது குப்பைகளில் அவை ஒரு சிறு சதவீதமே. உணவுப் பொருட்களை பாலிதீன் கவர்களில் கட்டி வீசும்போது, அது மொத்தமும் எதற்கும் உதவாத மக்காத குப்பையாக மாறிவிடுகிறது.

எங்களுக்கு திருவான்மியூர் கடற்கரை பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே ராம்கோ நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு ஓரளவு தூய்மையாக இருந்தது ஒரு பகுதி. காரணம் அவர்கள் நிறுவியிருந்த குப்பை போடும் பைகள். சரியான வசதிகள் தந்தால் பராமரித்தால் மக்களும் ஒத்துழைக்கிறார்கள். சுத்தமான இடத்தில் முதல் குப்பையைப் போட தயங்குபவர்கள்தான் இங்கே பெரும்பான்மை.

வழக்கம் போல தோண்டத் தோண்ட வந்தவை மது பாட்டில்கள், தண்ணீர் பாக்கெட்டுகள்தான். அந்தப் பகுதி மீனவர் குடியிருப்பைச் சேர்ந்த சில குட்டிகள் சுத்தம் செய்பவர்களோடு இணைந்து கொண்டார்கள். மாறாத புன்னகையுடன் வேலை செய்தார்கள். போட்டோ எடுத்துக்கலாமா என்று கேட்டபோது அழகான தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார்கள். நாம் ஓடி ஓடி சுத்தம் செய்தாலும் அவர்கள்தான் அந்தக் கடலின் நாளைய நம்பிக்கை என்று தோன்றியது.

நிகழ்வு

அவள் பூனைக்குட்டியைக் கொஞ்சிக் கொண்டிருந்தபோது
அவன் தொண்டை எரிய குடித்துக் கொணடிருந்தான்
அவள் எறும்புகளை மிதித்து விடாமல்
தாண்டிச் சென்றபோது
அவன் கத்தியின் கூர்மையை சோதித்துக் கொண்டிருந்தான்
அவள் அதிகாலைக் குளிரை சிலிர்த்துக் கொண்டிருந்தபோது
அவன் சம்பவ இடத்தைத் தேர்ந்து
கொண்டிருந்தான்
அவள் வாழ்வின் கண்ணிகளை கோர்த்துக் கொண்டிருந்தபோது
அவன் சாவின் புழுக்கங்களை சுமந்து கொண்டிருந்தான்
அவள் ரத்தச்சேற்றில் சருகாக உதிர்ந்து கிடந்தபோது
அவன் கறை படிந்த கத்தியோடு மறைந்து கொண்டிருந்தான்
இவை அத்தனையும் நிகழ்ந்தபோது நாங்கள் அங்குதானிருநதோம்
இனிமேல் நிகழ்வனவற்றைப் பார்ப்பதற்கும் அங்குதானிருப்போம்
உங்களுக்கு நிகழாதவரை நீங்களும் எங்களோடிருங்கள்

– ஷான்

200கிமீ அனுபவம்

13592687_10155087472679546_2902786707140109280_n

மூன்று நான்கு முறை சைக்கிளில் நூறு கிலோ மீட்டர் வரை ஓட்டும் நம்பிக்கை வந்துவிட்டபடியால் இருநூறு கிலோ மீட்டர் ஓட்ட வேண்டும் என்று ஒரு ஆசை. இது பிஆர்எம் என்று அழைக்கப்படும் போட்டி. முதலில் வருபவர்களுக்கு பதக்கம் எல்லாம் இல்லை. அவர்கள் சொன்ன நேரத்துக்குள் ஆங்காங்கே இருக்கும் அவர்களது செக் பாயிண்டுகளில் சென்று சேர வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்துவிட வேண்டும். வருடம் முழுக்க போட்டிகள் அவ்வப்போது நடக்கும். 200, 300, 400, 600, 1000கிமீ என்று நடக்கும். நீங்கள் முடிக்கும் தூரத்துக்கு ஏற்ப உங்களுக்கு சான்றிதழ்கள் கிடைக்கும். எனக்கு இதுதான் முதல் முறை.

நீண்ட தூர சைக்கிள் பயணங்களில் கவனிக்க வேண்டியது போகும் பகுதியின் தட்ப வெப்பம், காற்று வீசும் திசை போன்றவை. எங்கள் சாலை பாதி பழைய மகாபலிபுரம் சாலையிலும் மீதி கிழக்கு கடற்கரை சாலையிலும். தமிழகத்தில் உள்ள மிக அழகான அதே நேரம் ஆபத்தான சாலைகளில் ஒன்று என்று கிழக்கு கடற்கரை சாலையை சொல்லலாம். பல இடங்களில் குறுகலாக சைக்கிள் செல்ல இடமே இருக்காது. பேயாகப் பறக்கும் வண்டிகள் கொஞ்சம் நடுக்கம்தான். கடற்கரை சாலை என்பதால் கடும் காற்று வீசும். நம் சக்தியை எல்லாம் காற்றை எதிர்த்து மிதிப்பதில் வீணடிப்போம். வேகம் வெகுவாகக் குறைந்துவிடும். சில நேரங்களில் சாதகமாகவும் இருக்கும். காத்திருக்க வேண்டும்.

என்னோடு வைப்ரன்ட் வேளச்சேரி குழுவைச் சேர்ந்த சாய் என்ற கல்லூரி இறுதியாண்டு மாணவன் இணைந்தான். அவனுக்கும் இதுதான் முதல் முறை. எங்களை வழிநடத்த ஒப்புக்கொண்ட ஸ்ரீராம் எங்கள் குழுதான். ஆனால் ஆயிரம் கிலோ மீட்டர் ஒட்டிய அனுபவம் உண்டு. எனவே திட்டமிடல், ஓய்வெடுத்தல் போன்றவற்றை ஸ்ரீராமிடம் விட்டுவிட்டோம். இருநூறு கிலோ மீட்டரை 13.5 மணி நேரத்தில் கடக்க வேண்டும் என்று நிர்ணயம். நடுவில் பல இடங்களில் செக் பாயிண்டுகள். அவற்றை சரியான நேரத்தில் அடைய வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக இருபது கிலோமீட்டர்கள் கடப்பது என்று திட்டமிட்டோம். நடுவில் காலை உணவு மற்றும் திரும்பும் இடத்தில் மதிய உணவு. அதன் பிறகு ஒரு இடத்தில் நிறுத்தி இளநீர் என்று திட்டம்.

வேளச்சேரியில் தொடங்கும்போதே லேசான தூறல் இருந்தது. அப்படி ஒரு காலநிலை அமைவது வரம். ஆனால் நம்முடைய மொபைல் மற்றும் ஈரம் படக்கூடாத பொருட்களை பத்திரப்படுத்த வேண்டும். ஷூ, சாக்ஸ் நனைந்து விடுவது கொஞ்சம் எரிச்சல், மற்றபடி மழையில் நனைந்தபடி செல்வது ஒரு சுகானுபவம். முதல் செக் பாயின்ட் 25கிமீ, டெகாத்லான், படூரில். அங்கே அமைப்பாளர்களிடம் முத்திரை மற்றும் கையெழுத்து வாங்கிக் கொண்டு மூன்று கடலை மிட்டாய்களுடன் பயணத்தைத் தொடர்ந்தோம். அதன் பிறகு மழை இல்லை. கல்லூரிக் கதைகள், பேய்க் கதைகள் என்று நேரம் ஓடியது.

மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி சோதனைச் சாவடி அருகே இரண்டாவது செக் பாயின்ட். அது 50கிமீ. பேசிக் கொண்டே வந்ததில் களைப்பு தெரியவில்லை. மூச்சிரைக்காமல் ஓட்ட வேண்டும். சாதகமான காற்று இருக்கும்போது வேகமாகவும், எதிர்காற்றில் மெதுவாகவும் ஓட்டி சராசரி வேகத்தைக் காப்பாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். சாப்பாட்டு நேரம் போக குறைந்தது இரண்டு மணி நேரம் நாம் சேமிப்பில் வைத்திருக்க வேண்டும். அதற்கான காரணம் பிறகு சொல்கிறேன். சைக்கிளில் இரண்டு பாட்டில்கள். ஒன்றில் குடிநீர். இன்னொன்றில் தண்ணீருடன் சக்திக்குத் தேவையான எலக்ட்ரால் கலந்திருக்கும். தொண்டை வறண்டு போகும் வரை காத்திருக்காமல் அவ்வப்போது சிறிது குடிக்க வேண்டும். 75கிமீ தொலைவில் காலை உணவு. ஒரு சாலையோர உணவகத்தில்.

முழுப்பயணத்திலும் சூரியன் வெளியே வரவே இல்லை. என்பது எங்கள் அதிர்ஷ்டம்தான். திரும்பும் புள்ளி 100கிமீக்கு பதிலாக 113கிமீ தொலைவில் இருந்தது. இதன் மூலம் எங்கள் பயணம் வேளச்சேரிக்கு பதிலாக படூரில் முடியும். மாலை வேளை போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இந்த ஏற்பாடு. 6.5 மணி நேரத்தில் திரும்பும் புள்ளியை அடைந்தோம். இரண்டு தயிர் சாதங்கள், சில மோர் பாக்கெட்டுகள் போன இடம் தெரியவில்லை. சில பல ஸ்ட்ரெச்சஸ் முடித்துக் கொண்டு மீண்டும் கிளம்பியபோது நேரம் பன்னிரண்டைத் தாண்டி இருந்தது. ஆனால் திரும்பும் வழியில் எங்கள் அனுபவமின்மை தெரிய ஆரம்பித்தது. சைக்கிள் ஓட்டுவதை விடக் கடுமையானது அந்த மெல்லிய கடின இருக்கைகளில் பலமணி நேரங்கள் அமர்ந்திருப்பதுதான். புதியவர்கள் நாங்கள் தடுமாறினோம்.

ஒரு இளநீர் கடையில் நிறுத்தி அங்கிருந்த இளநீர், நுங்கு என்று அத்தனையையும் காலி செய்து அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மீண்டும் கிளம்பினோம். நூற்று அறுபது கிலோ மீட்டர் முடிக்கையில் பாலாற்றின் பாலத்தில் பெரிய சத்தத்துடன் முன் சக்கரத்தின் காற்று வெளியேறியது. முன்பு ஒரு இடத்தில் சற்று அதிக நேரத்தைக் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்று நான் சொன்னது இது போன்ற எதிர்பாராத சூழல்களை சமாளிக்கத்தான். மாற்று டியூப், பஞ்சர் ஓட்டும் கருவிகள் ஆகியவை எங்களிடமே இருந்தது. இருக்க வேண்டும். இருபது நிமிடங்களுக்கு மேல் விரயமானது. அதன் பிறகு அடுத்த பஞ்சர் விழுந்துவிடக் கூடாது என்று வேண்டியபடியே ஒட்டினேன்.

ஆனால் பஞ்சர் ஒட்டி எழுந்த போது காலில் சக்தி அனைத்தும் வடிந்த மாதிரியான உணர்வு. வேகம் வெகுவாகக் குறைந்துவிட்டது. ஸ்ரீராம் கூடவே வந்து உற்சாகப்படுத்தி என்னை செலுத்தியபடி வந்தான். நிறுத்தாதீங்க மிதிங்க, கீப் கோயிங், இதோ வந்தாச்சு.. என்று. ஆனால் அந்த தூரம் நீண்டு கொண்டே போன மாதிரியான ஒரு பிரமை. திடீரென்று கண்ணில் தெரிந்த டெகாத்லான் பெயர் பலகை கோபுர தரிசனமாய்க் குளிர்ச்சி தந்தது. 12 மணி நேரத்துக்கு சில நிமிடங்கள் குறைவாக இருந்தபோது போராட்டம் முடிவுக்கு வந்தது. வாழ்த்து சொன்ன வைப்ரன்ட் வேளச்சேரி நண்பர்களுக்கு காற்று கலந்த நன்றியைத் தான் சொல்ல முடிந்தது. நிமிடங்கள் கடந்த பிறகு வீட்டுக்கு இன்னும் இருபத்தைந்து கிலோ மீட்டர்கள் இருப்பது உறைத்தது. ஆனால் அதற்கு மேல் அந்த சைக்கிள் சீட்டில் ஏறி அமரும் தைரியம் இல்லாததால் என்னோடு போட்டியில் கலந்து கொண்ட அலுவலக நண்பர் வீட்டில் சைக்கிளை விட்டுவிட்டேன். அங்கே வந்திருந்த Ramanathan Andiappan என்னை தனது பைக்கில் வீடு கொண்டு வந்து சேர்த்தார். பைக்கில் அமர்ந்தும் வலி உயிர் போனது வேறு டிபார்ட்மென்ட்.

திட்டமிடுதல், மனதைத் தயாரித்தல், சரியான உணவு உட்கொள்ளுதல், உடம்பில் நீர், சர்க்கரை, உப்பு அளவைப் பாதுகாத்தல், போட்டியாகப் பார்க்காமல் ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக்குதல், வலி பொறுத்தல், நண்பர்களுக்கு உதவுதல், சுயநலமற்று இருத்தல் என்று எத்தனையோ பாடங்களுடன் கூடிய அந்தப் பன்னிரண்டு மணி நேரத்தை அளித்த பரம்பொருளுக்கு நன்றிகள்.

– ஷான்.