எதிரொலிக்கும் அறைகள்

ஒரு மனிதனின் கருத்துருவாக்கம் அவனுடைய சார்பு நிலையிலிருந்து வருகிறது. சார்பு நிலை அவனுடைய நம்பிக்கைகள், சூழல், கல்வி ஆகியவற்றால் உருவாக்க்கி கட்டமைக்கப்படுகிறது. தொழில்நுட்பம் அன்றாட வாழ்வில் ஊடுருவுவதற்கு முன்பாக ஒரு மனிதனின் சார்பு நிலையானது அவன் சார்ந்த மதம், கல்வி, மண், இனம் ஆகியவற்றைப் பொறுத்து நிலைபெற்றது. அதைத் தொடர்ந்து அது மாற்றமடையும் தருணங்கள் அபூர்வமானதாகவே இருந்தன. அதே நேரம் தொடர்ந்து நூல்களைப் படிக்கும், விவாதிக்கும் ஒருவனின் சிந்தனை உருவாக்கம் தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. ஆனால் அப்படியானவர்கள் சிறிய சதவீதம்தான். அந்த மாற்றம் கூட ஒரு காலத்துக்குப் பிறகு மெல்லக் குறைவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தார்கள். தங்களுடைய நிலைப்பாடு சார்ந்த நூல்களையே தேடிப்படித்து அதையே மேலும் மேலும் கட்டுறுதி செய்கிறார்கள். இது தொடர்பாக மேலை நாடுகளில் பல ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.

உதாரணமாக பருவநிலை மாற்றங்கள் குறித்து உலகெங்கும் நடக்கும் ஆராய்ச்சிகள் பற்றிய சர்ச்சையையே எடுத்துக் கொள்வோம். அமெரிக்க அரசாங்கம் பருவ நிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக நிறைய நிதியை ஒதுக்கிய காலங்களில் அது உண்மை என்று நிரூபித்து அந்த நிதியைப் பெறுவதற்காகவே பல விஞ்ஞானிகள் புள்ளிவிவரங்களைத் திரித்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இது பல நேரங்களில் வேண்டுமென்றே திட்டமிட்டு நடைபெறாது. ஆனாலும் பலரும் நம்பிவிட்ட ஒரு விஷயத்தை நிரூபிக்கும் நோக்கத்துடன் நடக்கும் ஆராய்ச்சிகளில் அதற்கு எதிராக வரும் புள்ளிவிவரங்களை அறிவியலாளர்களின் மனம் ஒதுக்கிவிடுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தொடர்ந்து பருவ நிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து எழுதி வந்த பத்திரிகைகள் அதை எதிர்த்து வரும் ஆராய்ச்சிகளை வெளியிடத் தயங்கின. அது அவர்கள் விரும்பி செய்ததல்ல, தங்கள் நிலைப்பாடையும் சார்பையும் மாற்றும் எந்த வாதத்தையும் ஒப்புக்கொள்ள சம்மந்தப்பட்ட எடிட்டர்கள் தயங்கியதை பின்னாளில் ஒப்புக் கொண்டார்கள். இப்போது பதவி ஏற்றுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆராய்ச்சிகளுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். பருவநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி ஒரு வீண்வேலை என்று அவர் கூறியிருக்கிறார். இனி இந்த ஆராய்ச்சிகளின் திசை எப்படி இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.

பருவ நிலை மாற்றம் என்பது முழுக்கப் பொய் என்று ஒதுக்க முடியாது என்பதற்கு நிறைய தரவுகள் இருக்கின்றன என்றாலும் அது நிகழும் வேகம் குறித்த தரவுகளை இந்த விமர்சகர்கள் கேள்வி கேட்கிறார்கள். புவி வெப்பமடைதலால் க்ரீன்லாந்து பகுதியின் மேல் படர்ந்திருந்த ஐஸ் உருகுவது குறித்து சிபிஎஸ் என்ற அமெரிக்க நிறுவனம் ஒரு செய்தி வெளியிட்டது. அதை எழுதிய வினிதா நாயர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை மாதத்து வெப்ப நிலைக்கும் தற்போதைய ஜூலை வெப்ப நிலைக்கும் இடையே 62 பாரன்ஹீட் உயர்வு இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் நாசா வெளியிட்ட நூறு ஆண்டுகளுக்கான சராசரி வெப்பநிலை குறித்த புள்ளிவிவரங்களில் அதுபோன்ற மாறுபாடு எதுவும் இல்லை என்று இதை மறுக்கிறார் வேறு ஒரு ஆராய்ச்சியாளர். சிபிஎஸ் தனது கட்டுரைக்கு சான்றாக எடுத்துக் கொண்ட வெப்பநிலை அளவீடு ஒரு மலைச் சிகரத்தில் எடுக்கப்பட்டத்தாகவும் மேகத்துக்கு மேலே இருக்கும் சிகரங்களில் சூரியனின் இருப்பைப் பொருத்து பெரியஅளவில் வெப்ப நிலை மாற்றம் இருப்பது இயற்கையே என்கிறார் அவர்.

இதே போல வேறு ஒரு ஆராய்ச்சில் கடல் நீர் மட்டத்தின் உயர்வைக் கணக்கிட எடுக்கப்பட்ட சாட்டிலைட் அளவீடுகளில் 68 இடங்களை விட்டுவிட்டுக் கணக்கிட்டு ஆண்டுக்கு 3.2மிமீ கடல் மட்ட உயர்வு இருப்பதாகக் கூறியதை ஒப்புக் கொண்டார் ஒரு சர்வதேச பருவ நலை மாற்ற ஆராய்ச்சியாளர் ஒருவர். அந்த 68 இடங்களை சேர்த்து கணக்கிட்டால் கடல் மட்டத்தின் உயர்வு 1மிமீ என்ற அளவிலேயே இருந்தது. ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேட்டபோது 1மிமீ என்று ஆராய்ச்சியில் குறிப்பிட்டால் அது புவி வெப்பமடைதல் என்ற கருத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என்றார் அவர். 1930ம் ஆண்டில்தான் வெப்பநிலைகளையும் கடல்மட்டங்களையும் ஆவணப்படுத்தும் வழக்கம் உலகெங்கும் பரவலாக வந்தது. அப்படியிருக்க இப்போது அபாய நிலையாக சுட்டப்படும் புள்ளிவிவரங்களின் இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை சரிபார்க்க வழியில்லை. இது ஏன் மனிதர்கள் அறியாத ஒரு பெரிய பருவசுழற்சியின் காரணமாக இருக்கக்கூடாது என்று கேட்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.

இந்த நேரத்தில் ஒன்றை கவனிக்க வேண்டும். எப்படி பருவநிலை மாற்றத்தை ஆதரிக்கும் அரசுகள், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் தங்களுக்கென்று ஒரு சாய்வை உருவாக்கினார்களோ அதே போல இவை அத்தனையும் ஹம்பக் என்று சொல்பவர்களும் தங்களுக்கென்ற ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டார்கள். அதற்கான தரவுகளைத் தேடிப் பகிர்ந்து கொண்டார்கள். பருவநிலை மாற்றம் தொடர்பான கட்டுரைகளைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கினார்கள். அது உண்மையில்லை என்று தொடர்ந்து எழுதினார்கள். பேசினார்கள். மைக்கேல் க்ரைக்டன் தொடர்ந்து தன்னுடைய நூல்களில் இந்த அறிவியல் ஆராய்ச்சிகளைக் கேள்விக்குள்ளாக்கி வந்தார். இந்த ஆய்வுகளின் முடிவுகளை விஞ்ஞானிகள் மிகைப்படுத்தி மக்களிடையேயும் அரசுகளிடையேயும் பீதியை உருவாக்கி அதன் மூலம் தொடர்ந்து ஆராய்ச்சிகளுக்கு நிதி கிடைக்கும்படி செய்தார்கள் என்று வெளிப்படையாக குற்றம் சாட்டி வந்தார். எனவே நீங்கள் எந்த சார்பு நிலையில் இருக்கிறீர்களோ அதற்கேற்ற தரவுகள் உங்களை வந்தடையும். எதிரணியைக் கேலி செய்யும். உங்களை மகிழ்வூட்டும்.

மீடியா துறையில் இதை எக்கோ சேம்பர் என்று அழைக்கிறார்கள். இந்த எதிரொலிக்கும் அறைகள் நம்முடைய நிலைப்பாடு சார்ந்த செய்திகளையே திரும்பத் திரும்ப நம்மைத் தேடச் சொல்லும். பொய்தான் என்று உள்மனம் சொன்னாலும் தங்கள் கட்சி சார்ந்த தொலைக்காட்சியையும் செய்தித்தாள்களையும் தேடித்தேடிப் படிக்கும் தொண்டர்கள் மனநிலை இப்படியானதுதான். வெறும் அச்சு ஊடகங்கள் இருந்த காலங்களில் இந்த எதிரொலிக்கும் அறைகளை உருவாக்க நீண்ட காலம் பிடிக்கும். இப்போதைய தொழில்நுட்ப உலகில் இது மிகவும் விரைவாகவும் இலகுவாகவும் நடக்கிறது. சமூக வலைதளங்களில் புழங்குபவர்களுக்கு இந்த மனநிலை பழக்கமானதுதான். உருவாக்க ஆகும் காலத்தைப் போலவே கலைக்கும் காலமும் குறுகியதாகவே மாறியிருக்கிறது.

மோடி ஆதரவு, மோடி எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு ஆதரவு, ஜல்லிக்கட்டு எதிர்ப்பு, பண நீக்க ஆதரவு/எதிர்ப்பு என்று எல்லாவற்றிற்கும் இதைப் பொருத்திப் பார்க்க முடியும். யாருமே விதிவிலக்கல்ல. தகவல் உண்மையா என்று சரிபார்ப்பவர்கள் கூட நமக்கு ஆதரவான தரவுகளை மேலோட்டமாகவும் எதிரான தரவுகளை பூதக் கண்ணாடியுடனும் அணுகியிருப்போம். அவ்வளவு நாட்கள் நட்பில் நீடித்திருந்த ஒருவருடன் சண்டையிட்டு விலகியிருப்போம். அதாவது நம்முடைய எக்கோ சேம்பரின் சங்கீதத்தைக் குலைக்கும் குரல்களை ஒரு முறையேனும் ஒடுக்கி அடக்கியிருப்போம். பிறிதொரு காலத்தில் அதை நினைத்து வருந்துவோம். அந்த நேரத்தில் வேறு ஒரு எதிரொலிக்கும் அறைக்குள் நாம் இருப்போம்.

கூகுள், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் இது குறித்து பின்புலத்தில் நிறைய ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன. தொடர்ந்து உங்கள் காலக்கோட்டில் ஒரு குறிப்பிட்ட தொனியிலான செய்திகளை அனுப்புவதன் மூலம் உங்கள் மனநிலையை பாதிக்கச் செய்ய முடியும் என்று கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது சிரியாவில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தையின் படத்தை திரும்பத் திரும்ப அனுப்பி கொண்டாட மனநிலையில் இருந்த ஒரு மனிதரை மெல்ல சோகமாக மாற்ற முடியும். அதுவரை நண்பர்களுடனான செல்பியைப் பகிர்ந்து கொண்டிருந்தவர் தானும் ஒரு சோகமான விஷயத்தைப் பற்றிப் பதிவிடத் தொடங்குவார். ஒரு குறிப்பிட்ட தலைவரைப் பற்றிய எதிர்மறையான செய்திகளைத் தொடர்ந்து அனுப்பி செயற்கையாக ஒரு எக்கோ சேம்பரை உருவாக்க முடியும். அல்லது அவரது அதிருப்தியாளர்களின் இணைய பதிவுகளை அதிகமாகவும் ஆதரவாளர்களின் பதிவுகளை குறைவாகவும் வரும்படி அல்காரிதம்களை மாற்றி அமைக்க முடியும். அது வேறு ஒரு தலைவருக்கோ அல்லது எதிரி நாட்டுக்கோ உதவியாக இருக்க முடியும். இப்போது பணம் கொடுத்தே குறிப்பிட்ட தலைவர்களின் வியாபார நிறுவனங்களின் நடிகர்களின் பக்கங்களை அதிகம் உங்கள் கண்முன் கொண்டு வர முடியும். மோடி, ஸ்டாலின் போன்றவர்களின் ஆன்லைன் பிரச்சாரங்களில் சிறியதாக ஸ்பான்சர்டு என்று இருப்பதை கவனித்திருப்பீர்கள். உங்கள், மொழி, வயது, விருப்பங்கள் சார்ந்து யாருக்குத் தேவையோ அவர்கள் கண்முன் மட்டும் இது வந்து நிற்கும்.

சாதாரண ஊடகங்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. அங்கே செய்திகளை நாம் தேடிச் செல்கிறோம். இங்கே செய்திகள் நம்மைத் தேடி வருகின்றன. அதுவும் நமக்கு அறிமுகமானவர்களிடமிருந்து. வரும் செய்திகளை அதிகமாக நம்புவதென்பது ஒரு மனோதத்துவம். நம்முடைய நட்பு வட்டத்தில் நமக்கு ஒத்த கருத்துடையவர்களாகப் பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதியும் இங்கே இருக்கிறது. இதில் நான் உட்பட யாரும் விதிவிலக்கல்ல. ஒவ்வொருவரும் அவரவருக்கான எதிரொலிக்கும் அறைகளை உருவாக்கிக் கொள்கிறோம். நாம் எதிர்பார்க்கும் ஓசைகளை ஒரு இசை போல அவை திரும்பத் திரும்ப ஏற்படுத்துகின்றன. நமது நம்பிக்கைகளை அவை தொடர்ந்து உறுதிப்படுத்துகின்றன. கூட்டத்தை விட்டு விலகி இல்லை என்ற ஆறுதல் நமக்குத் தொடர்ந்து தேவையாக இருக்கிறது.

அப்படியானால் எல்லா நேரங்களிலும் தவறான திசையில் நாம் செல்கிறோமென்று பொருள் கொள்ள வேண்டியதில்லை. இதுவரை மட்டுமல்ல இனி வரும் காலங்களிலும் இது போன்ற எதிரொலிக்கும் அறைகளில் சிக்குவதும் மீள்வதும் ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து நடக்கும். அந்த அறை நண்பர்கள் கூட்டமாகவோ, ஒரு சாதி சார்ந்த அமைப்பாகவோ, ஒரு வாட்ஸ் ஆப் குழுவாகவோ, ஃபேஸ்புக் நண்பர்களாகவோ இருக்கலாம். அல்லது நாம் சார்ந்த கட்சியின் தொலைக்காட்சியாக இருக்கலாம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எக்கோ சேம்பர்களுக்குள்தான் நாம் வாழப் போகிறோம். ஆனால் எக்கோ சேம்பர்களின் இருப்பை உணர்வது நமது கருத்தாக்கத்தை நம்மால் இயன்ற அளவு தூய்மையாக வைத்துக் கொள்ள நாம் எடுக்கும் முதல் படியாக இருக்கும்.